தமிழ்நாடு சட்டப்பேரவையின் நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடரின் இறுதி நாளான இன்று, பட்ஜெட் தொடர்பான விவாதங்களுக்கு நிதி அமைச்சர் ஓ. பன்னீர் செல்வத்தின் பதிலுரையைப் புறக்கணித்து திமுக வெளிநடப்பு செய்தது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின், 'ஆளுநரிடம் மனு கொடுத்ததற்கே 18 உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுத்த பேரவைத் தலைவர், அரசுக்கு எதிராக வாக்களித்த 11 உறுப்பினர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.
பேரவைத் தலைவர் இவ்விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் கூறியிருக்கிறது. எனவே, இதுகுறித்து அவரை விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினோம். 11 உறுப்பினர்கள் தகுதி நீக்கம் தொடர்பாகவும் பேச அனுமதிக்கவில்லை. பேசியதையும் அவைக் குறிப்பில் இருந்து நீக்கியுள்ளனர்.
என்.பி.ஆர் எனப்படும் தேசிய மக்கள் தொகைப் பதிவேட்டை நிறைவேற்றக் கூடாது எனவும் வலியுறுத்தினோம். ஆனால், பாஜகவுக்கும், சிறைக்கும் பயந்து தேசிய மக்கள் தொகைப் பதிவேட்டை ஏற்றுக்கொள்கிறார்கள். மக்களைப் பற்றி அவர்களுக்கு கவலை இல்லை. நாடாளுமன்றத்தில் அச்சட்டத்தை ஆதரித்தக் கட்சிகள் கூட, தங்கள் மாநிலத்தில் அதனை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளன. குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக விவாதிக்க பலமுறை பேரவையில் தீர்மானம் கொடுத்தும் இதுவரை அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஆய்வில் உள்ளது என்று கூறி ஏற்க மறுக்கிறார்கள் ' எனக் கூறினார்.
இதையும் படிங்க: 'செய்யூரில் பழுதடைந்த மின்மாற்றியை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்'