கட்சிக்கு எதிராக செயல்பட்டதாக திமுகவிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட ஆயிரம் விளக்கு சட்டப்பேரவை உறுப்பினர் கு.க.செல்வம், அதிகாரப்பூர்வமாக இன்னும் சில நாட்களில் பாஜகவில் இணைவார் எனத் தெரிகிறது. அரசியல் களத்தில் கடந்த நாட்களில் இது பெரும் பேசுபொருளானது. இதனைத்தொடர்ந்து இன்னும் பல அதிருப்தி திமுகவினர் விரைவில் கட்சி மாறுவார்கள் என சமூக வலைதளங்களில் விவாதங்கள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இன்று(ஆகஸ்ட் 7) தமிழ் நாளிதழ் ஒன்றின் முதல் பக்கத்தில், திமுக பொருளாளர் துரைமுருகன் பொதுச்செயலாளர் பதவி கிடைக்காததால் அதிருப்தியில் உள்ளதாகவும், எனவே அவரும் கட்சியை விட்டு விரைவில் விலக உள்ளதாகவும் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
இதையடுத்து, நாளிதழ் செய்தி தொடர்பாக திமுக பொருளாளர் துரைமுருகன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 'எனக்கு பொதுச்செயலாளர் பதவி கிடைக்காததால் அதிருப்தியில் இருப்பதாக நாளிதழ் ஒன்று, என் மீது களங்கத்தை கற்பிக்கும் வகையில் செய்தி வெளியிட்டுள்ளதை வன்மையாக கண்டிக்கிறேன்.
பதவிகளுக்காக ஆசைப்பட்டு நான் திமுகவிற்கு வந்தவனல்ல. அண்ணாவின் திராவிட நாடு கொள்கை பார்த்து, படித்து, ஒரு போராளியாக இந்த இயக்கத்திற்கு வந்தவன். நான் இதுவரை பெற்ற பதவிகள் கிடைக்காமல் போயிருந்தாலும், கட்சியின் அடிமட்டத் தொண்டனாக இருவண்ணக் கொடியை கையிலேந்தி முழக்கமிட்டுக்கொண்டே இருப்பேன்' எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: 'என் உயிரினும் மேலான..'- மு.கருணாநிதி குறித்து சிறப்பு காணொலித் தொகுப்பு!