ராயபுரத்தில், சென்னை வடக்கு மாவட்ட திமுக துணைச் செயலாளர் இளைய அருணாவின் மகள் திருமணம் இன்று நடந்தது. சுயமரியாதை திருமணமான இதற்கு தலைமையேற்ற திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மணமக்கள் ரோகிணி, கிஷோர் ஆகியோருக்கு திருமணத்தை நடத்தி வைத்து வாழ்த்தினார். பின்னர், விழா மேடையில் பேசிய மு.க. ஸ்டாலின், ”டி.என்.பி.எஸ்.சி. முறைகேடுக்கு இடைத்தரகர் ஜெயக்குமார்தான் காரணம் என்று கூறப்படுகிறது. இடைத்தரகர் ஜெயக்குமார் தானாக வந்து சரணடைய காரணம் என்ன? டி.என்.பி.எஸ்.சி. முறைகேடு விவகாரத்தில் அத்துறையின் அமைச்சரான ஜெயக்குமார் பொறுப்பேற்று பதவி விலக வேண்டும். அப்போதுதான் சுதந்திரமாக விசாரணை நடக்கும்.
அடுத்த ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்தவுடன் தற்போது நடைபெற்று வரும் ஊழல், லஞ்சம் அனைத்துக்கும் விசாரணை நடத்தி தண்டனை பெற்றுத் தருவோம் “ என்றார்.
இதையடுத்து அதேப் பகுதியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான கையெழுத்து இயக்கத்தை தொடங்கிவைத்து பேசிய அவர், அரசியலுக்கு அப்பாற்பட்டு குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக மக்கள் அனைவரும் ஒன்று திரண்டுள்ளதாகக் கூறினார். மக்களின் உணர்வுகளுக்கு மத்திய அரசு செவி சாய்க்கவில்லை என்றால் போராட்டம் தீவிரமடையும் என்றும் மு.க. ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்தார்.
இதில் ராயபுரம் பகுதி மக்கள் பெருமளவில் கலந்துகொண்டு குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்திட்டனர்.
இதையும் படிங்க: நளினியின் விடுதலை கோரிக்கை - மத்திய அரசு எதிர்ப்பு!