திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” அரியர்ஸ் தேர்வுக்கட்டணம் செலுத்திய மாணவர்கள் அனைவரும், தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்படுவார்கள் என முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார்.
எதைச் செய்தாலும் அவசரம் அவசரமாகவும், அரைவேக்காட்டுத்தனமாகவும் செய்து, சம்பந்தப்பட்டவர்களைக் கடும் பாதிப்புக்குள்ளாக்கி வரும் அதிமுக அரசு, இப்போது கல்லூரி மாணவர்களின் எதிர்கால நலனிலும் அதே அவசர விளையாட்டை ஆடிக் கொண்டிருக்கிறது.
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவிற்கு அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் அனுப்பியுள்ள மின்னஞ்சலில், ‘ இறுதியாண்டு மாணவர்கள் தங்களின் முந்தையப் பருவத் தேர்வுகளில் தேர்ச்சி பெறாத பாடங்களுக்குத் தேர்வின்றி தேர்ச்சி என்கிற அறிவிப்பு ஏற்க இயலாதது. அத்தகைய மாணவர்கள், உயர் படிப்பில் மற்ற பல்கலைக்கழகங்களால் ஏற்கப்படமாட்டார்கள். தொழில் நிறுவனங்களும் அவர்களின் தகுதியை ஏற்காது ’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சிலின் இக்கடிதம், மாணவர்களின் எதிர்காலம் குறித்து, அதிர்ச்சியும் கவலையும் அளிப்பதாக உள்ளது. பல்கலைக்கழக மானியக்குழு மற்றும் அகில இந்தியத் தொழில்நுட்பக் கவுன்சிலின் விதிமுறைகள் குறித்து கல்வியாளர்களிடம் உரிய ஆலோசனைகள் பெற்று அரசு செயல்படுகிறதா, அல்லது சுயநல காரணங்களுக்காக, மாணவர்களின் எதிர்காலத்தை வீணடிக்க கபடநாடகம் ஆடுகிறதா என்ற கேள்வி, பெற்றோர், மாணவர், கல்வியாளர்கள் மனதில் எழுந்துள்ளது.
எனவே, மாணவர்களின் எதிர்காலத்துடன் தொடர்ந்து விளையாடிக் கொண்டிருக்காமல், அவர்களின் சூழலை கருத்தில் கொண்டு, நியாயமான தகுதியான வகையில் அவர்கள் தேர்ச்சி பெறுவதற்கு உரிய நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வலியுறுத்துகிறேன் ” என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: 'மத்திய அரசின் இந்தித் திணிப்பால் கொதித்தெழும் தமிழ்நாடு' - வைகோ எச்சரிக்கை