இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஊரடங்கை மீண்டும் நீட்டித்து முதலமைச்சர் பழனிசாமி, நேற்று (ஆகஸ்ட் 30) வெளியிட்டுள்ள அறிக்கையில், பொய்களையும் புரட்டுகளையும் பட்டியலிட்டு சுமார் 6 மாத கால மக்களின் வேதனைகளையும், சோதனைகளையும் மிகவும் குறைத்து மதிப்பிட்டு, எள்ளி நகையாடியிருப்பது மிகுந்த கண்டனத்திற்குரியது.
12 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் மத்திய அரசிடமிருந்து பெற வேண்டிய ஜி.எஸ்.டி நிலுவைத் தொகையைப் பெற முடியவில்லை; கரோனா பேரிடருக்காகக் கேட்ட எந்த நிதியுதவியையும் மத்திய அரசிடமிருந்து பெற இயலவில்லை; கண்துடைப்பு நாடகமாக கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களின்படி முதலீடுகள் வரவில்லை; நிதி நிலைமையில் மூச்சுத் திணறி, நிதி நிர்வாகம் தத்தளித்துக் கொண்டிருக்கிறது என்பதை மறைத்து அபாண்டப் பொய்களை அள்ளி வீசியிருக்கிறார்.
வேலைவாய்ப்பின்மையே இல்லை என்றும் தனிநபர் வருவாய் படிப்படியாக உயர்ந்து வருகிறது என்றும் கொஞ்சம் கூட நாகரிகமின்றி பொய் சொல்லி, வேலை இழந்து வருமானம் இழந்து தவிப்போரை எள்ளி நகையாடியிருக்கிறார். மேலும், தொற்றுப் பரவல் கட்டுப்பாட்டிற்குள் உள்ளது என்று, 4 லட்சத்து 22 ஆயிரத்து 85 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்ட நாளில் சொல்வதற்கு, உண்மையிலேயே முதலமைச்சருக்கு அசாத்திய துணிச்சல் இருக்க வேண்டும்.
பொருளாதார பாதிப்பிலிருந்து தமிழ்நாடு விரைந்து மீண்டு வருகிறது என்று முதலமைச்சர் கூறும் அதே அறிக்கையின் நான்காம் பத்தியில், ’ பொருளாதாரத்தை மீட்டெடுக்க 30.9.2020 வரை ஊரடங்கு நீட்டிப்பு ‘ என்கிறார். கரோனா தொற்றை எப்படி கையாளக்கூடாது என்பதற்கு இந்திய அளவில் மட்டுமல்ல, உலகளவிலேயே ஒரு அரசு இருக்கிறது என்றால், அது அதிமுக அரசுதான்.
ஆகவே மக்களை, கரோனா பேரிடரைக் காட்டி ஏமாற்றி, பொருளாதாரத்தைச் சீரழித்து, டெண்டர்களில் கொள்ளையடித்தது போதும். குறைந்தபட்சம், இப்போது செய்யப்பட்டுள்ள தளர்வுகளிலாவது, தனிநபர் வருமானத்தை இழந்து வேலை, தொழில் இழந்து தவிக்கும் மக்களுக்கு ஆக்கபூர்வமான முறையில் உதவிட, உருப்படியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: மக்கள் பயன்பாட்டுக்கு வந்த 118 அவசர கால ஊர்திகள்: முதலமைச்சர் தொடங்கி வைப்பு!