இந்தியாவின் பல மாநிலங்களைக் காட்டிலும் தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வி பயின்றோர் மட்டுமின்றி, உயர்கல்வி கற்றோரின் எண்ணிக்கையும், விகிதமும் கூடுதலாக உள்ளது எனவும், தமிழ்நாட்டின் கல்விமுறையை முன்மாதிரியாகக் கொள்ள வேண்டிய மத்திய அரசு, நமது மாணவர்களின் வாய்ப்புகளைக் கெடுக்கும் வகையிலேயே கடந்த ஆறு ஆண்டுகளாகச் செயல்பட்டு வருவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், ” இந்தியாவில் ஜனநாயகம் உயிரோடு உலவிடுமா என்று அஞ்சுகிற அளவுக்கு, அதன்மீது ஒரு நூறு தாக்குதல்களை தொடுத்துக் கொண்டிருக்கிறது மோடி அரசு.
அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை என்பதுபோல, கருத்துச் சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்கும் வகையில் காஷ்மீர் முதல் தமிழகம் வரை கைது நடவடிக்கைகள், தேசிய பாதுகாப்பு சட்டம், குண்டர் சட்டப் பாய்ச்சல்கள் உள்ளிட்டவை தொடர்ந்து கொண்டிருக்கிறது. எமர்ஜென்சியை நேரடியாகவே நெஞ்சம் நிமிர்த்தி எதிர்கொண்ட திமுகவை, இத்தகைய பூச்சாண்டித்தனங்களால் எவராலும் எதுவும் செய்து விட முடியாது.
கரோனா பேரிடரால் ஏற்பட்ட ஊரடங்கு காலத்தை பயன்படுத்தி, அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அனைத்து உரிமைகளையும் பறித்துக் கொண்டிருக்கிறது மத்திய பாஜக அரசு. அதன் இன்னொரு கோரமுகம்தான், புதிய கல்வி கொள்கை. உண்மையில் அது புதிய கல்வி கொள்கை அல்ல; பழைய மனுதர்ம ஒடுக்குமுறை மீதான பளபளப்பு மிக்க ‘வர்ண’ப் பூச்சு.
திமுகவும் தோழமை இயக்கங்களும் புதிய கல்விக் கொள்கையின் பேராபத்தை உணர்ந்து அதற்கு எதிர்வினையாற்றும் நிலையில், மாநில உரிமைகளை மொத்தமாகப் பறிக்கின்ற வகையில் செயல்பாட்டுக்கு வரவிருக்கும் இக்கல்விக்கொள்கை குறித்து அதிமுக அரசு என்ன நிலைப்பாடு கொண்டிருக்கிறது என்பது அவர்களுக்கும் தெரியவில்லை; பொதுமக்களுக்கும் புதிராக இருக்கிறது.
எனவே, இந்தியாவை சிதைக்கும் பேரபாய சக்திகளுக்கு எதிராக அணி திரள்வோம்! இடஒதுக்கீடு வழக்கை போல, இன்னல் தரும் கல்விக் கொள்கை எதிர்ப்பிலும் வென்று காட்டுவோம், சமூக நீதி காப்போம், சமத்துவக் கல்வி வளர்ப்போம் ” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: புதிய கல்விக் கொள்கை - விழிப்புணர்வு ஏற்படுத்த யூஜிசி கடிதம்!