சென்னை தெற்கு மாவட்டத்தில் அதிக இளைஞர்களை உறுப்பினர்களாகச் சேர்த்தவர்களுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது. இதில் திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், சட்டப்பேரவை உறுப்பினர்கள் மா. சுப்பிரமணியன், அன்பில். மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இளைஞரணிச் செயலாளராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னர், 30 லட்சம் புதிய இளைஞர்களை புதிய உறுப்பினர்களாகச் சேர்க்க வேண்டும் என்ற இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. அதன்படி, சென்னை தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட சுமார் ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 673 பேர் திமுக இளைஞர் அணியில் உறுப்பினர்களாக்கப்பட்டுள்ளனர். இதில் சிறப்பாகச் செயல்பட்ட பகுதிச் செயலாளர்களுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நினைவுப் பரிசுகளை வழங்கிப் பாராட்டினார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், ”என் வாழ்நாளில் இது ஒரு மறக்க முடியாத நிகழ்ச்சி. இங்கு எத்தனையோ நிகழ்ச்சிகள் நடந்திருந்தாலும் அண்ணா, கருணாநிதி முன்னிலையில் இவ்வளவு சிறப்பாக ஒரு நிகழ்ச்சி நடைபெறுவது இதுவே முதல்முறை “ எனத் தெரிவித்தார்.
பின்னர் பேசிய திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், ”இளைஞர் அணியை வலுப்படுத்தவும், அதனை வலுப்படுத்துவதன் மூலம் திமுகவிற்கு பெருமை சேர்த்திடவும் இந்த நிகழ்ச்சி நடைபெற்றுவருகிறது. ஒரு சட்டப்பேரவைத் தொகுதிக்கு குறைந்தபட்சம் 10 ஆயிரம் பேரை உறுப்பினர்களாகச் சேர்க்க வேண்டும் என்று முடிவெடுத்து, மொத்தம் 30 லட்சம் உறுப்பினர்கள் என்று நிர்ணயம் செய்யப்பட்டு இளைஞர் அணி செயல்பட்டுவருகிறது.
இது சாத்தியப்படுமா என்ற சந்தேகம் அனைவருக்கும் இருந்தது. ஆனால், இந்நிகழ்ச்சியின் மூலம் 30 லட்சம் பேர் அல்ல, 60 லட்சம் பேருக்கும் மேல் சேர்க்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு வந்துள்ளது. இது அனைவருக்கும் வர வேண்டும்.
நான் இளைஞர் அணிச் செயலாளராக பணியாற்றியபோது கருணாநிதி அடிக்கடி என்னைப் பாராட்டி, ’ஸ்டாலின் என்றால் உழைப்பு, உழைப்பு, உழைப்பு’ என்று கூறுவார். மேலும், என்னைப் பார்த்து அவருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் பணிபுரிய வேண்டும் என்ற ஆசை வந்ததாகவும் கூறினார். இதை நான் இங்கு ஏன் சொல்கிறேன் என்றால், இதே வார்த்தைகளை உதயநிதியை பார்த்து நாளை நான் கூறும்நிலை வர வேண்டும்“ எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'நித்தியானந்தா போல் தனித்தீவு வாங்கி அதில் முதல்வர் ஆகலாம்' - ஸ்டாலினுக்கு ஜெயக்குமார் அட்வைஸ்!