மருத்துவப்படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் இடஒதுக்கீடு வழங்கும் மசோதா சட்டப்பேரவையில் ஒருமனதாக தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்ட மசோதாவிற்கு, 35 நாட்களுக்கு மேலாகியும் ஆளுநர் அனுமதி வழங்காததைக் கண்டித்து பல்வேறு அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்திருந்தனர். முதலமைச்சரும் பின்னர் அமைச்சர்கள் குழுவும் நேரில் சந்தித்து ஆளுநரிடம் இது குறித்து முறையிட்டனர். மேலும், ஆளுநர் ஒப்புதல் அளிக்கும் வரை மருத்துவ கலந்தாய்வு நடைபெறாது என்றும் அரசு அறிவித்தது.
எதிர்கட்சித் தலைவரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினும், அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு மசோதா விவகாரத்தில் விரைந்து முடிவெடுக்கக் கோரி, ஆளுநருக்கு கடிதம் எழுதியிருந்தார். அதற்கு, இவ்விவகாரத்தில் முடிவெடுக்க 3 அல்லது 4 வாரங்கள் தேவைப்படுவதாக ஆளுநர் பதில் கடிதம் எழுதியிருந்தார். ஆனால், இதனை ஏற்காத மு.க.ஸ்டாலின், அரசு பள்ளி மாணவர்களுக்கு தீங்கு விளைவிக்கும் ஆளுநரையும், மசோதாவிற்கு காலத்தோடு ஒப்புதல் பெறத் தவறிய தமிழ்நாடு அரசையும் கண்டித்து இன்று ஆளுநர் மாளிகை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவித்திருந்தார்.
அதன்படி, ஆளுநர் புரோகித் மற்றும் அதிமுக அரசை கண்டித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கண்டன பதாகைகள் ஏந்தி நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில், அக்கட்சியின் பொருளாளர் டி.ஆர்.பாலு, துணை பொதுச்செயலாளர் பொன்முடி, இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், மகளிரணி செயலாளர் கனிமொழி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். அப்போது ஆளுநரையும், முதலமைச்சரையும் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இதையும் படிங்க: திமுக - பாஜக கட்சிகளுக்கு இடையே மோதல்: தொடங்கும் சுவர் அரசியல்