திமுக மகளிரணிச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி, சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசும்போது, “மதச்சார்பற்ற கூட்டணிக் கட்சிகளோடு திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளையும், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான கருத்துகளையும் குடியரசுத் தலைவரிடம் உணர்த்துவதற்காக மாபெரும் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் குடியரசுத் தலைவரை இன்று நேரில் சந்தித்து, குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக இரண்டு கோடிக்கும் அதிகமாக பெறப்பட்ட கையெழுத்துகளைக் கொடுத்துள்ளோம்.
இச்சட்டம் தொடர்பான தமிழ் மக்களின் உணர்வுகளையும், திமுக, அதன் தோழமைக் கட்சிகளின் உணர்வுகளையும் குடியரசுத் தலைவரிடம் அப்போது தெரிவித்தோம். குடியரசுத் தலைவர் இது குறித்து பரிசீலிப்பதாக உறுதி அளித்துள்ளார் “ எனக் கூறினார்.
பத்திரிகையாளர்கள் பற்றி ஆர்.எஸ். பாரதி கூறிய கருத்து பற்றிக் கேட்டதற்கு, திமுக தலைவர் ஸ்டாலின் அதற்கு பதிலளிப்பார் என கனிமொழி கூறினார்.
இதையும் படிங்க: CAA-க்கு எதிராக கோட்டை நோக்கி பேரணி - 10 ஆயிரம் போலீஸார் குவிப்பு