சென்னை: அருந்ததியினர் சமுதாயத்திற்கு மூன்று விழுக்காடு உள்ஒதுக்கீடு வழங்கும் அதிகாரம் மாநில அரசுக்கு உண்டு எனத் தீர்ப்பளித்து சமூக நீதியை நிலைநாட்டியுள்ளது உச்ச நீதிமன்றம் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அருந்ததியினர் சமுதாயத்திற்கு மூன்று விழுக்காடு உள்ஒதுக்கீடு வழங்கும் அதிகாரம் மாநில அரசுக்கு உண்டு என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இச்சூழலில் இத்தீர்ப்பினை வரவேற்று திமுக தலைவர் ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வரவேற்று கருத்து தெரிவித்துள்ளனர்.
திமுக தலைவர் ஸ்டாலின் கூறுகையில், "பட்டியலினத்தவருக்கு வழங்கப்பட்டுள்ள 18 விழுக்காடு இடஒதுக்கீட்டில், அருந்ததியினர் சமுதாயத்திற்கு மூன்று விழுக்காடு உள்ஒதுக்கீடு வழங்கும் அதிகாரம் மாநில அரசுக்கு உண்டு” என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஐந்து பேர் கொண்ட அரசியல் சாசன சட்ட அமர்வு இன்று அளித்துள்ள மிக முக்கியமான தீர்ப்பு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சமூகநீதிக் கொள்கைக்கு கிடைத்துள்ள மகத்தான வெற்றி என்பதால், இதயபூர்வமாக வரவேற்று இறும்பூது எய்துகிறேன்.
திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியிலிருக்கும் சமயங்களிலும், ஆட்சியில் இல்லாத நேரங்களிலும் 'சமூகநீதி' என்ற ஒரே சிந்தனையுடன் ஒருமுகமாகச் செயல்படும் பேரியக்கம். தமிழ்நாடு சமூகநீதி வரலாறு அதை எப்போதும் எடுத்துச் சொல்லும் என தெரிவித்துள்ளார்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, சமூகநீதி லட்சியத்தையே உயிர் மூச்சாகக் கொண்ட கருணாநிதியால் பட்டியலின மக்களுக்கு இடஒதுக்கீடு செய்யப்பட்ட 18 விழுக்காட்டில், அருந்ததியினர் சமூகத்திற்கு மூன்று விழுக்காடு உள்ஒதுக்கீடு செய்து ஆணை பிறப்பித்தது செல்லும் என்று உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு மகிழ்ச்சிக்கு உரியதாகும், வரவேற்கத்தக்கதாகும் என தெரிவித்துள்ளார்.