வட்டப்பிரதிநிதி முதல் தலைவர் வரை
வட்டப் பிரதிநிதி, மாவட்ட பிரதிநிதி, பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர் இளைஞர் அணி செயலாளர், துணை பொதுச்செயலாளர், பொருளாளர் என படிப்படியாக அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிய மு.க.ஸ்டாலின், கருணாநிதி மறைவுக்குப் பிறகு திமுக தலைவர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டார்.
சென்னை மேயர், அமைச்சர், துணை முதலமைச்சர் உள்ளிட்ட பதவிகள் வகித்து தற்போது திமுகவின் முதலமைச்சர் வேட்பாளராக முதன்முதலாக சட்டப்பேரவைத் தேர்தலை சந்திக்கப் போகிறார். உள்கட்சி பிரச்னைகளை கையாளுவதில் ஸ்டாலின் திறமை வாய்ந்தவர் என்றே கூறலாம்.
இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு திமுகவில் இருந்து வெளியேறி தனி இயக்கம் கண்ட மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தற்போது ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணியில். அதேபோல் கட்சிக்குள் அவ்வப்போது குரல் எழுப்பும் அண்ணன் அழகிரியும், தம்பியின் செயல்பாட்டால் அமைதி ஆகி விடுவது மற்றொரு எடுத்துக்காட்டு.
பள்ளிப்படிப்பு
திமுக தலைவர் ஸ்டாலின், கடந்த 1953ஆம் ஆண்டு மார்ச் 1 ஆம் தேதி சென்னையில் பிறந்தார். ரஷ்ய முன்னாள் அதிபர் ஜோசப் ஸ்டாலின் நினைவாக மகனுக்கு ஸ்டாலின் என பெயர் சூட்டினார் கருணாநிதி.
சென்னை அண்ணா சாலை சர்ச் பார்க் கான்வென்ட்டில் படிக்க விண்ணப்பம் செய்தபோது, அவரின் பெயரைப் பார்த்து பள்ளியில் சேர்த்துக்கொள்ள மறுத்தது நிர்வாகம். இதனால் சேத்துப்பட்டு கிறித்துவ கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் கல்வி பயின்றார்.
மிசாவில் சிறை சென்ற ஸ்டாலின்
தனது இளமை பருவத்திலேயே நண்பர்களை இணைத்து கோபாலபுரம் இளைஞர் திமுக என்ற அமைப்பை ஏற்படுத்தி அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார் ஸ்டாலின். திண்டுக்கல் தீர்ப்பு, தேவன் மயங்குகிறான், நாளை நமதே உள்ளிட்ட திராவிட இயக்க கொள்கை விளக்க நாடகங்களில் நடித்துள்ளார் ஸ்டாலின்.
ஒரே ரத்தம், மக்கள் ஆணையிட்டால், குறிஞ்சி மலர் உள்ளிட்ட தொலைக்காட்சி தொடர்களிலும் ஸ்டாலின் நடித்துள்ளார். கடந்த 1973ஆம் ஆண்டு திமுக பொதுக்குழு உறுப்பினர் பதவி அவருக்கு வழங்கப்பட்டது. கடந்த 1976ஆம் ஆண்டு நாடு முழுவதும் நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்டது.
அப்போது ஸ்டாலினை கைது செய்ய கருணாநிதியின் இல்லத்துக்குச் சென்ற காவல் துறையினர், அவர் இல்லாததால் திரும்பினர். மதுராந்தகத்தில் நாடகம் ஒன்றில் நடித்து முடித்துவிட்டு வீடு திரும்பினார் ஸ்டாலின். காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்த கருணாநிதி, அவரை அனுப்பி வைத்தார்.
திருமணமாகி 5 மாதங்களே ஆன நிலையில் சிறை சென்ற ஸ்டாலின், சுமார் ஓராண்டு சிறைவாசம் அனுபவித்தார்.
ஆயிரம் விளக்கு தொகுதி எம்எல்ஏ
கடந்த 1984ஆம் ஆண்டு சென்னை ஆயிரம் விளக்குத் தொகுதியில் போட்டியிட்ட ஸ்டாலின், தோல்வி அடைந்தார். பின்னர் அதே தொகுதியில் இருந்து 4 முறை சட்டப்பேரவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். தற்போது சென்னை கொளத்தூர் தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினராகப் பதவி வகித்து வருகிறார்.
சென்னை மேயர்
கடந்த 1996ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சி மேயர் தேர்தலில் வெற்றி பெற்றார் ஸ்டாலின். மாநகராட்சி உறுப்பினர்கள் மேயரை தேர்ந்தெடுத்து வந்த நிலையில், முதல் முறையாக மக்களின் நேரடி வாக்குகளைப் பெற்று மேயர் ஆனார். இதனைத்தொடர்ந்து, கடந்த 2001ஆம் ஆண்டு இரண்டாவது முறையாக ஸ்டாலின் மேயராகத் தேர்வு செய்யப்பட்டார்.
ஒரே நபர் இரு அரசுப் பதவிகளில் இருக்க முடியாது என்ற சட்டத் திருத்தம் காரணமாக சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை வைத்துக்கொண்டு மேயர் பதவியை ராஜினாமா செய்தார். இதனைத்தொடர்ந்து, 2006ஆம் ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. உள்ளாட்சித் துறை அமைச்சராகப் பொறுப்பேற்று திறம்பட பணியாற்றினார் ஸ்டாலின்.
கடந்த 2009ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டுவரை துணை முதலமைச்சராகப் பதவி வகித்தார் ஸ்டாலின்.
திமுக தலைவர்
கருணாநிதியின் உடல் நிலையைக் கருத்தில் கொண்டு, கடந்த 2017 ஜனவரி மாதம் திமுகவின் செயல் தலைவர் பதவி ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டது. திமுக தலைவர் மு.கருணாநிதியின் மறைவிற்குப் பிறகு ஸ்டாலின் திமுகவின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
முதலமைச்சர் கனவு நிறைவேறுமா?
கருணாநிதிக்குப் பிறகு திமுகவுக்குத் தலைமை ஏற்றுள்ள ஸ்டாலின், சுற்றுப் பயணம் மேற்கொள்வதில் சளைக்காதவர் மாதத்தின் பெரும்பாலான நாட்களில் சென்னைக்கு வெளியில் தமிழகத்தின் மற்ற மாவட்ட கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருப்பார். கட்சி மற்றும் ஆட்சியில் பல்வேறு பதவிகள் வகித்த போதும், முதலமைச்சர் நாற்காலி ஸ்டாலினுக்கு எட்டாக் கனியாகவே உள்ளது.
தற்போது முதல் முறையாக திமுக தலைமையிலான கூட்டணியில் முதலமைச்சர் வேட்பாளராகத் தேர்தல் களத்தில் குதிக்கிறார் ஸ்டாலின். அவரின் முதலமைச்சர் கனவு நிறைவேறுமா?