சென்னை: ராஜா அண்ணாமலைபுரம், அருள்மிகு கபாலீசுவரர் கற்பகாம்பாள் திருமண மண்டபத்தில், இன்று (அக். 5) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வள்ளலார் முப்பெரும் விழாவினை கொண்டாடுகின்ற வகையில், “வள்ளலார் – 200” இலச்சினை, தபால் உறை மற்றும் சிறப்பு மலர் ஆகியவற்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டு, ஆண்டு முழுவதும் அன்னதானம் வழங்கும் நிகழ்வையும் தொடங்கி வைத்தார்.
முப்பெரும் விழா: இந்நிகழ்வில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், 'தந்தை பெரியார் அவர்களுடைய பிறந்தநாளை சமூகநீதி நாளாகவும், அண்ணல் அம்பேத்கர் அவர்களுடைய பிறந்தநாளை சமத்துவ நாளாகவும் அறிவித்த நமது திராவிட மாடல் அரசு, 'வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்' என்ற திருவருட்பிரகாச வள்ளலாரின் பிறந்தநாளை, தனிப்பெரும் கருணை நாளாக அறிவித்து இருக்கிறது.
வள்ளலார் பிறந்து 200 ஆண்டுகள் அவர் தொடங்கிய தரும சாலைக்கு 156ஆண்டுகள், அவர் ஏற்றிய தீபத்திற்கு 152 ஆண்டுகள் ஆகின்றன இவற்றை இணைத்து ’முப்பெரும் விழா’வாக இந்த நிகழ்ச்சியை நாம் நடத்திக்கொண்டு இருக்கிறோம். என்னைப் பொறுத்தவரையில், இந்த நிகழ்ச்சி சிலர் சொல்லி வரும் அவதூறுகளுக்குப் பதில் சொல்லக்கூடிய விழா தான் இந்த விழா.
ஆன்மிகத்திற்கு எதிரானது அல்ல: திராவிட மாடல் ஆட்சி என்பது ஆன்மிகத்திற்கு எதிரானது, திராவிட மாடல் ஆட்சியானது மக்களின் நம்பிக்கைகளுக்கு எதிரானது என்று மதத்தை வைத்துப் பிழைக்கக்கூடிய சிலர் நாட்டிலே பேசி வருகிறார்கள். மீண்டும் இதை நான் குறிப்பிட்டுச்சொல்ல ஆசைப்படுகிறேன்.
நான் தெளிவோடு சொல்ல விரும்புவது, ஆன்மிகத்திற்கு எதிரானது அல்ல, திமுக. ஆன்மிகத்தை அரசியலுக்கும், தங்களது சொந்த சுயநலத்திற்கும் உயர்வு-தாழ்வு கற்பிப்பதற்கு மட்டுமே பயன்படுத்திக்கொள்பவர்களுக்கு எதிரானது தான் இந்த திராவிட மாடல் திமுக ஆட்சி.
தமிழ் மண்ணின் சமயப் பண்பாட்டை அறிந்தவர்கள், இதை நன்கு உணர்வார்கள்! பிறப்பால் உயர்வு தாழ்வு இல்லை என்று, பிற்போக்குக் கயமைத்தனங்களை எதிர்க்கக்கூடிய வள்ளுவரின் மண்தான், இந்த தமிழ் மண்! "நட்ட கல்லும் பேசுமோ, நாதன் உள்ளிருக்கையிலே" என்றும் முழங்கிய சித்தர்கள் உலவிய மண், நம்முடைய தமிழ் மண்!
வள்ளலார் சர்வதேச மையம்: பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற திராவிடத்தின் மூலக் கருத்தியலை முதலில் சொன்னவர், அய்யன் வள்ளுவர் பெருமான் அவர்கள். சாதியும் மதமும் சமயமும் பொய்யென ஆதியில் உணர்த்தியவர், அருட்பெருஞ்சோதி இராமலிங்க அடிகளார் அவர்கள்.
சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் 'வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம்' அமைக்கப்படும் என்று சொல்லி இருக்கிறோம்.
அதன்படி, பலமுறை நம்முடைய அமைச்சர் சேகர்பாபு அவர்கள் அந்த இடத்திற்குச்சென்று பார்வையிட்டு, ரூபாய் 100 கோடி மதிப்பீட்டில் இதனை அமைப்பதற்கான பெருந்திட்ட வரைவுத் திட்டம் தயாரிக்கும் பணி தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. விரைவில் கட்டுமானப்பணிகள் தொடங்கும். இதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டிருக்கிறது. இந்தக் குழுவினருடன் நானும் பல ஆலோசனைகளை செய்திருக்கிறேன்.
முப்பெரும் விழாவிற்கான ஏற்பாடுகளெல்லாம் சிறப்பாக செய்யப்பட்டிருக்கிறது. 52 வாரங்களுக்கு ’முப்பெரும் விழா’ பல்வேறு நகரங்களில் நடக்க இருக்கிறது. ஓராண்டிற்கு தொடர் அன்னதானம், பேச்சாளர்களுக்கு சன்மானம் உள்ளிட்ட இந்த விழாவிற்கு 3 கோடியே 25 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டிருக்கிறது.
வள்ளலாரை தொடர்ந்து அரசும்: வள்ளலார் தனது கொள்கையைச் சமரச சன்மார்க்கமாக வடிவமைத்தார். அந்த கொள்கையைச் செயல்படுத்த சமரச சன்மார்க்க சங்கம் தொடங்கினார். அந்த சங்கத்துக்காக சன்மார்க்க கொடி உருவாக்கினார். அந்தச் சங்கத்துக்காக 'அருட்பெருஞ்சோதி தனிப்பெரும் கருணை' என்ற ஆன்ம நெறியை உருவாக்கினார். அதற்காக சத்திய ஞானசபையை உருவாக்கினார்.
ஒரு கொள்கையை உருவாக்கிச் சொல்லிவிட்டு, அதை விட்டுவிட்டு போகாமல், அதனை எப்படி செயல்படுத்த வேண்டும் என்று எடுத்துக்காட்டாக விளங்கக்கூடியவர் நம்முடைய வள்ளலார் அவர்கள்.
அவர் வழியில் நடக்கக்கூடிய இந்த அரசானது, காலை உணவுத் திட்டத்தைத் தொடங்கி இருக்கிறது. பசியுடன் பள்ளிக்கு வரும் பிள்ளைகளுக்கு உணவளிக்கும் திட்டமானது மணிமேகலையில் அமுதசுரபியின் தொடர்ச்சியாக, வள்ளலார் மூட்டிய அணையா அடுப்பின் தொடர்ச்சியாக, தமிழ்நாடு அரசால் தொடங்கப்பட்டிருக்கிறது.
ஒத்தாரும் உயர்ந்தாரும் தாழ்ந்தாரும் எவரும் ஒருமை உளராகி உலகியல் நடத்த வேண்டும் - என்பதே அவரது அறநெறி!
அத்தகைய அறநெறி உலகத்தைப் படைக்க உறுதியேற்போம். அதற்காக உழைப்போம்” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: மியான்மரில் சிக்கி தவித்த 13 பேர் தமிழ்நாடு திரும்பினர்