சென்னை: 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும் தபால் மூலம் வாக்களிக்க அனுமதியளித்து இந்தியத் தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவை எதிர்த்து திமுக மற்றும் மாற்றுத் திறனாளிகள் சங்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் விசாரணையில் உள்ளன.
இச்சூழலில், தபால் மூலம் வாக்களிக்கவுள்ள மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளி வாக்காளர்களின் தொகுதிவாரியான பட்டியலை வழங்கக் கோரி திமுக சட்டப்பேரவை உறுப்பினரும், கட்சியின் முதன்மைச் செயலாளருமான கே.என்.நேரு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
அம்மனுவில், தேர்தல் விதிகளில் திருத்தம் கொண்டு வந்து, 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும் தபால் வாக்கு வசதியை வழங்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இறுதி வாக்காளர் பட்டியலைப் பெற அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் உரிமை உள்ளது. அதனடிப்படையில் 80 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத் திறனாளிகள் பட்டியலை வழங்கக் கோரி 2020ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மனு அனுப்பியும் பதில் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.