திமுக மூத்தத் தலைவரும், அக்கட்சியின் பொதுச்செயலாளருமான பேராசிரியர் அன்பழகன் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல் காலமானார்.
க.அன்பழகன் திமுக முன்னாள் தலைவர்களான அண்ணா, கலைஞர் தொடங்கி தற்போது ஸ்டாலின் வரை துணை நின்றவர். தான் எடுத்த திராவிட மற்றும் கடவுள் மறுப்பு கொள்கையில் இறுதி வரை உறுதியாக இருந்தவர்.
திமுக ஆட்சி காலத்தில் கல்வித்துறை, நிதித்துறை, சமூகநலத்துறை போன்ற துறைகளின் அமைச்சராக செயல்பட்டுள்ளார். அண்ணா மறைவுக்கு பிறகு கலைஞர் கருணாநிதிக்கு கடைசி வரை உறுதுணையாக இருந்தவர்.
இந்தியாவில் அவசர நிலை பிரகடனம் செய்த சமயத்தில் அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி ஆட்சிக்கு ஏற்பட்ட நெருக்கடியில் கருணாநிதியை பதவியில் இருந்து விலகுமாறு அன்பழகன் தெரிவித்தார் என்று அப்போது பேச்சுகள் உண்டு. கருணாநிதி தன்னை மக்கள் மத்தியில் நிரூபித்த பிறகு அதன் பின் இறுதி வரை கருணாநிதிக்கு ஆதரவாக அன்பழகன் இருந்தது குறிப்பிடத்தக்கது.
மக்கள் மத்தியில் செல்வாக்கு மிக்க பெரிய தலைவராக திகழாவிட்டாலும், திமுக மற்றும் பிற அரசியல் கட்சியினர் மத்தியில் பேராசிரியர் அன்பழகன் என்றால் தனி மரியாதை உண்டு என்றே கூற வேண்டும்.