சென்னை விருகம்பாக்கம் பகுதியில் உள்ள தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதா இன்று (அக்.12) மதியம் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அழைப்பு வந்துள்ளது.
அதனடிப்படையில் விருகம்பாக்கம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனே போலீசார், வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சோதனையில் ஈடுபட்டனர். சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்தது.
அதையடுத்து அதே எண்ணிலிருந்து ஆர்.ஏ. புரம் 2ஆவது சாலையில் உள்ள நடிகர் தனுஷ் வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மிரட்டல் வந்தது. அபிராமபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சோதனையில் ஈடுபட்டு தகவல் புரளி என கண்டுபிடித்தனர்.
அதனால் போலீசார், வெடிகுண்டு மிரட்டல் விட்ட நபரின் செல்போன் எண்ணை வைத்து மரக்காணத்தை சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்டவரை கைது செய்தனர்.
மேலும், அவர் ஏற்கனவே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, நடிகர் அஜித், சூர்யா உள்ளிட்டவர்கள் வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டதாக மிரட்டல் விடுத்து கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: நடிகர் சூர்யாவின் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!