தேமுதிக தலைவர் விஜயகாந்த், உடல்நலக்குறைவு காரணமாக நேற்று (மே. 19) அதிகாலை 3 மணியளவில் சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது தேமுதிக தொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையடுத்து, அவரது உடல்நிலை சீராக இருப்பதாக தேமுதிக தலைமைக்கழகம் அறிக்கை வெளியிட்டது.
அந்த அறிக்கையில், "தேமுதிக தலைவர் விஜயகாந்த் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை சீராக உள்ளது. ஓரிரு நாட்களில் சிகிச்சை முடிந்து வீடு திரும்புவார். மக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம்" எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
நேற்று மாலை விஜயகாந்த் மேற்கொண்ட கரோனா பரிசோதனையில் அவருக்கு கரோனா பாதிப்பு இல்லையென்பது தெரியவந்தது. இந்நிலையில் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதையடுத்து, தேமுதிக தலைவர் விஜயகாந்த் சிகிச்சை முடிந்து இன்று வீடு திரும்பினார். மருத்துவர்கள், ஓய்வெடுக்குமாறும் யாரையும் சந்திக்க கூடாது எனவும் விஜயகாந்திடம் அறிவுறுத்தியுள்ளனர்.
கரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், தொண்டர்கள் யாரும் விஜயகாந்தை சந்திக்க வர வேண்டாம் என்று பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.