நாட்டில் கரோனா இரண்டாவது அலையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஆக்சிஜன் பற்றாக்குறை, மருத்துவமனைகளில் படுக்கைகளின்மை, இடப்பற்றாக்குறை உள்ளிட்ட பிரச்னைகள் மத்திய, மாநில அரசுகளுக்கு பெரும் சவாலாக உள்ளது. தமிழ்நாட்டில் கரோனா பரவலை தடுக்கும் விதமாக நாளை முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வருகிறது.
விஜயகாந்த் அறிவிப்பு
இந்நிலையில் ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரியை கரோனா சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு பயன்படுத்திக்கொள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த் அனுமதி வழங்கியுள்ளார்.
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்ட அவர், "தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க போதிய இடவசதி இல்லாத சூழ்நிலை உள்ளது.
எனவே, நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க, செங்கல்பட்டு மாவட்டம் மாமண்டூரில் உள்ள ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரியை தாராளமாக பயன்படுத்திக் கொள்ள தமிழ்நாடு அரசுக்கு தெரிவித்துள்ளேன்" என குறிப்பிட்டுள்ளார்.
அனைத்து உதவிகளையும் செய்யத் தயார்
மேலும், கடந்த ஆண்டு கரோனா தாக்கத்தின் போது, நோயாளிகளுக்காக ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரியை பயன்படுத்திக்கொள்ள அனுமதி அளித்திருந்தேன். அதேபோல் இந்த ஆண்டும் ஆண்டாள் அழகர் கல்லூரியை வழங்குவதோடு, இது தொடர்பாக தேவைப்படும் அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக இருக்கிறேன்என்றும் தெரிவித்துள்ளார்.
முன்னதாக திருமண மண்டபங்களை தற்காலிக மருத்துவமனைகளாக மாற்ற அரசு முடிவெடுத்தால் தன்னுடைய திருமண மண்டபம் பொன்மணி மாளிகையை தந்து தன்னால் உதவ முடியும் என கவிஞர் வைரமுத்து தெரிவித்திருந்தார்.