இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கரோனா தொற்று நாளுக்கு நாள் பெருகி அச்சத்தையும், பொருளாதார பாதிப்பையும், நடுத்தர மற்றும் ஏழை, எளிய மக்களின் அன்றாட வாழ்வாதாரத்தையுமே புரட்டிப் போட்டுள்ள இன்றைய நிலையில், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை ஒன்றுமே நடக்காததுபோல், வழக்கமான அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன.
ஜீ (JEE), நீட் (NEET) போன்ற திணிக்கப்பட்ட தேர்வுகளுக்கான கடைசி வாய்ப்பு என்றெல்லாம் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சரின் டிவிட்டரில் நாளும் அறிவிப்புகள் வருகின்றன. எங்கெங்கு தேர்வு மையங்கள் அமையும் என்றெல்லாம் அறிவிப்புகள் வந்த வண்ணம் உள்ளன. இங்கிலாந்தின் ஆக்ஸ்ஃபோர்டு, இம்பீரியல் காலேஜ், லண்டன் ஸ்கூல் ஆஃப் பிசினஸ், அமெரிக்காவில் உள்ள வார்ட்டன், கெல்லாக், கர்னிஜி, மெல்லோன் முதலிய பிரபல கல்லூரிகளில் ‘G-MAT / GRE’ என்ற நுழைவுத்தேர்வை வற்புறுத்தாமல் மாணவர்களைச் சேர்ப்பது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் யூசி பெர்க்கிலி பல்கலைக்கழகத்திலும் கடந்தாண்டு பட்டதாரி வகுப்பில் படித்தவரை நுழைவுத் தேர்வு ‘G-MAT / GRE’ வேலை அனுபவம் இன்றியே மேற்பட்டப்படிப்புக்கு சேர்த்துக் கொள்வது என்று முடிவு செய்துள்ளனர்.
இனிமேலாவது, ‘நீட்’ தேர்வு என்ற ஊழல் மலிந்த, ஏனைய பாடத்திட்டங்களின் அறிவு வறட்சியை ஏற்படுத்துகின்ற இவற்றை மாற்றிட துணிய வேண்டும். இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளில் இல்லாத, அவர்கள் கவலைப்படாத கல்வித்தரம் என்ற ‘மாய வடிவம்‘ நமக்கெதற்கு? மக்கள் நலனுக்கும், நல்வாழ்வுக்குமே முன்னுரிமை இப்போது. மக்கள் நல அரசுகளாக இருப்பின் இது பற்றி சிந்திக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: செங்கோட்டையனிடம் உதயநிதி ஸ்டாலின் நேரில் மனு!