சென்னை: தீபாவளியை முன்னிட்டு பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல 16 ஆயிரத்து 540 சிறப்பு பேருந்துகளும், மீண்டும் ஊர் திரும்ப 17 ஆயிரத்து 719 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக விடுக்கப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், "பண்டிகை தினங்களை முன்னிட்டு ஏராளமான மக்கள் தங்களது வசிப்பிடங்களிலிருந்து சொந்த ஊர் சென்று திரும்பும்போது, கூட்ட நெரிசல் ஏற்படாத வண்ணம் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம்.
அந்த வகையில் இம்முறையும் தீபாவளி திருநாளை முன்னிட்டு, பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர் செல்ல 16,540 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பொதுமக்கள் பாதுகாப்பான வகையில் பயணம் மேற்கொள்ள தேவையான முன்னேற்பாடுகளை செய்துள்ளதாகவும், தீபாவளி பண்டிகைக்காக 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், பொதுமக்களின் வருகைக்கேற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகையின் போது பயணம் செய்ய இதுவரை 72,597 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர். மேலும், கூட்ட நெரிசலைத் தவிர்க்க வழக்கமாக பண்டிகை நாட்களில் இயக்கப்படுவதைப் போல, சென்னையில் இருந்து வெளியூர் செல்ல கோயம்பேடு, கே.கே.நகர், தாம்பரம் பேருந்து நிலையம்- மெப்ஸ், தாம்பரம் ரயில் நிலையம், பூந்தமல்லி ஆகிய 5 பேருந்து நிலையங்களில் இருந்து வெவ்வேறு வழித்தடங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:பத்திரப்பதிவு தொடர்பான புகார்கள்: மேல்முறையீட்டு தீர்ப்பாயம் அமைக்க நீதிமன்றம் பரிந்துரை