அமைச்சர் வேலுமணியை விமர்சித்து சமூக வலைதளத்தில் செய்தி வெளியிட்டது தொடர்பாக திமுக உறுப்பினர் ஒருவர் மீது வழக்குப் பதிவு செய்து காவல் துறையினர் கைது செய்தனர். இந்தக் கைதை கண்டித்து கோவை திமுக தெற்கு மாவட்டப் பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ், கிணத்துக்கடவு கிழக்கு ஒன்றியச் செயலாளர் துரை உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனை அடுத்து, ஆழியார் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, கடந்த மே 30ஆம் தேதி மாவட்டப் பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ், ஒன்றிய செயலாளர் துரை ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனைத் தொடர்ந்து, அவர்கள் இருவரும் ஜாமின் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், கோவை திமுக தெற்கு மாவட்டப் பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ், கிணத்துக்கடவு கிழக்கு ஒன்றியச் செயலாளர் துரை உள்ளிட்ட திமுக நிர்வாகிகளுக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டது.
இந்நிலையில், திமுக நிர்வாகிகள் கைதுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நபர்கள் மீதும் காவல் துறை வழக்குப் பதிவு செய்திருந்தது. இதில் சீனிவாசன், சண்முகப்பிரியா, தேவேந்திரன் உள்ளிட்ட 43 பேர் முன் ஜாமீன் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி இளந்திரையன், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக வழக்குப் பதிவு செய்யப்பட்ட 43 பேருக்கும் முன் ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.
இதையும் படிங்க : ஸ்டாலின் அறிக்கை அரசியல் செய்கிறார்- அமைச்சர் பாண்டியராஜன்