சென்னை: தீவுத்திடலில் நடைபெற்ற குடியரசு தின அலங்கார அணிவகுப்பில் இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாட்டின் பங்களிப்பை போற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டு, அணிவகுப்பில் பங்கேற்ற மூன்று அலங்கார ஊர்திகளை கோயம்புத்தூர், ஈரோடு மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் காட்சிப்படுத்தும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
டெல்லியில் இன்று (ஜனவரி 26) நடைபெற்ற குடியரசு தின அலங்கார அணிவகுப்பில் மாநிலங்கள் சார்பாகவும், ஒன்றிய அரசின் துறைகள் சார்பாகவும் 'இந்தியா 75' என்கிற தலைப்பில் நடைபெற்ற அலங்கார ஊர்தி அணிவகுப்பு நடைபெற்றது.
திருத்தங்களை மேற்கொண்ட பின்பும் நிராகரிப்பு
இதில், விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாட்டின் பங்களிப்பை எடுத்துக் கூறும் வகையில் அலங்கார ஊர்திக்கான வடிவமைப்பு மாதிரிகள் ஒன்றிய அரசின் தேர்வுக் குழுவுக்கு சமர்ப்பிக்கப்பட்டது.
மூன்று முறை ஒன்றிய அரசு எடுத்துரைத்த திருத்தங்களை மேற்கொண்ட பின்பும், எந்த வித காரணமும் இன்றி தமிழ்நாட்டின் சார்பான அலங்கார ஊர்திகள் நிராகரிக்கப்பட்டன. இதுகுறித்து தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தனது வருத்தத்தினை பிரதமருக்கு கடிதம் மூலம் தெரிவித்திருந்தார்.
மேலும், டெல்லியில் குடியரசு தின அலங்கார அணிவகுப்பில் வாய்ப்பு மறுக்கப்பட்ட தமிழ்நாடு அலங்கார ஊர்திகள், சென்னையில் நடைபெறும் குடியரசு தின விழாவில் இடம் பெறுவதோடு, தமிழ்நாடு முழுவதும் காட்சிப்படுத்தப்படும் என்று கடந்த ஜனவரி 18ஆம் தேதியன்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
மக்களின் வரவேற்பைப் பெற்ற அலங்கார ஊர்திகள்
அந்த வகையில், சென்னையில் இன்று (ஜனவரி 26) நடைபெற்ற குடியரசு தின விழாவில், ஒன்றிய அரசால் நிராகரிக்கப்பட்ட மூன்று அலங்கார ஊர்திகளும் அணி வகுப்பில் பங்கேற்று பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது.
இன்று (ஜனவரி 26) சென்னை, தீவுத்திடலில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மூன்று அலங்கார ஊர்திகளையும் முதற்கட்டமாக, கோயம்புத்தூர், ஈரோடு மற்றும் மதுரை மாவட்டங்களில் காட்சிப்படுத்தும் வகையில், முதலமைச்சர் ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
கோயம்புத்தூர், ஈரோடு மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களைச் சார்ந்த அமைச்சர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் இந்த அலங்கார ஊர்திகளை வரவேற்று, பொதுமக்கள் பார்வையிடும் வகையில் நகரின் முக்கியப் பகுதிகளில் இவ்வூர்திகள் காட்சிப்படுத்தப்படும்.
முதல் அலங்கார ஊர்தி சிறப்புகள்
இந்த முதல் ஊர்தியின் முகப்பில் வேலூர் கோட்டையில் 1806ஆம் ஆண்டு நடைபெற்ற சிப்பாய்ப் புரட்சி, மருது சகோதரர்கள், வேலு நாச்சியார், வீராங்கனை குயிலி, வீரபாண்டிய கட்டபொம்மன், அவரது படையில் தளபதியாக விளங்கிய தூத்துக்குடி சுந்தரலிங்கம் மற்றும் மன்னர் பூலித்தேவன், அவரது படைத்தளபதி ஒண்டிவீரன், அழகு முத்துக்கோன், மேலும் மருது சகோதரர்கள் உருவாக்கிய காளையார்கோயில் கோபுரம் உள்ளிட்ட பல சுதந்திரப் போராட்ட வீரர்கள் உயிருடன் காட்சி தரும் வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த அலங்கார ஊர்தி மதுரை மாநகர் வண்டியூர் தெப்பக்குளம் அருகில் பொதுமக்களின் பார்வைக்கு காட்சிப்படுத்தப்படும்.
இரண்டாவது அலங்கார ஊர்தி
வ.உ. சிதம்பரனார், சுப்பிரமணிய சிவா, சேலம் விஜயராகவாச்சாரி உள்ளிட்ட சுதந்திரப் போராட்ட வீரர்களை போற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டது, இந்த இரண்டாவது அலங்கார ஊர்தி. இந்த ஊர்தி கோயம்புத்தூர் மாநகர் வ.உ.சிதம்பரனார் பூங்கா அருகில் பொதுமக்களின் பார்வைக்கு காட்சிப்படுத்தப்படும்.
மூன்றாவது அலங்கார ஊர்தி
தந்தை பெரியார், ராஜாஜி, முத்துராமலிங்கத் தேவர், காமராஜர், ரெட்டைமலை சீனிவாசன், வாஞ்சிநாதன், தீரன் சின்னமலை, கொடிகாத்த திருப்பூர் குமரன், உ.வே.சா, காயிதேமில்லத், தஞ்சாவூர் ஜோசப் கொர்னேலியஸ் செல்லதுரை குமரப்பா, தியாகச் சீலர் கக்கன் ஆகியோரைப் போற்றும் வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த அலங்கார ஊர்தி, ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பொதுமக்களின் பார்வைக்கு காட்சிப்படுத்தப்படும்.
இதையும் படிங்க: 73ஆவது குடியரசு தினம்: உயர்நீதிமன்றத்தில் கொடியேற்றிய பொறுப்பு தலைமை நீதிபதி