மத்திய அரசு, கடந்த 2009ஆம் ஆண்டு கல்வி உரிமைச் சட்டத்தை நிறைவேற்றியது. இந்த சட்டத்தின்படி, ஒவ்வொரு தனியார் பள்ளிகளிலும் 25 சதவீத இடங்களை ஏழை, எளிய மாணவர்களுக்கு ஒதுக்க வேண்டும்.
அந்த இடங்களுக்கான கட்டணத் தொகை, குழந்தைகளுக்கான கல்விச் செலவுத் தொகையாக சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் மூலமாக தனியார் பள்ளிகளுக்கு வழங்கப்படும். தமிழ்நாட்டில், கடந்த 2016-17 ஆம் ஆண்டில், கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் சேர்க்கப்படும் ஒரு மாணவருக்கு 25 ஆயிரம் ரூபாயை செலவுத் தொகையாக நிர்ணயித்து அரசு வழங்கி வந்தது.
இந்தத் தொகை 2017-18ம் ஆண்டில் 11 ஆயிரம் ரூபாயாக குறைக்கப்பட்டது. இந்த ஆண்டுகளில் மாணவர்களின் கல்விச் செலவை மறு நிர்ணயம் செய்யக் கோரியும், 2020-21ம் ஆண்டுக்கு நியாயமான செலவை நிர்ணயிக்க அரசுக்கு உத்தரவிடக் கோரியும், தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளிகள் சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அதில், தமிழ்நாடு பட்ஜெட்டில் பள்ளிக் கல்வித் துறைக்கு 28 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. தமிழ்நாட்டில் அரசு அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் 83 லட்சத்து 16 ஆயிரத்து 237 மாணவர்களுக்கு அரசு செலவு செய்கிறது.
ஒரு மாணவருக்கு அரசு சுமார் 32 ஆயிரம் ரூபாய் செலவிடும் நிலையில், தனியார் பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் சேர்க்கப்படும் மாணவர்களுக்கு 11 ஆயிரம் என செலவு நிர்ணயித்தது தவறு என கூறப்பட்டுள்ளது.
கடந்த 2017-18 முதல் 2019-20ஆம் கல்வியாண்டு வரையிலான மூன்று கல்வியாண்டுகளுக்கான செலவுத் தொகையை மறு நிர்ணயம் செய்து, மீத தொகையைத் திருப்பித்தர உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, கடந்த 2017-18 முதல் 2019-20 கல்வியாண்டிற்கான கல்வி உதவித் தொகையை ஏன் இதுவரை கொடுக்கவில்லை என்று கேள்வி எழுப்பிய நீதிபதி, ஆறு வாரத்தில் கொடுக்கப்படாமல் உள்ள கல்வி உதவித்தொகையை கொடுக்க உத்தரவிட்டார்.
மேலும், அது தொடர்பாக நிலை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, கல்வி உதவித்தொகையை 25 ஆயிரம் ரூபாயிலிருந்து 11 ஆயிரம் ரூபாய் குறைத்து தொடர்பாகவும், தமிழ்நாடு அரசு பதில் மனு தாக்கல் செய்யுமாறும் உத்தரவிட்டு விசாரணையை ஆகஸ்ட் 25ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.