சென்னை: தமிழக முஸ்லிம்கள் கல்வி நிறுவனங்கள், சங்கங்கள் அமைப்பின் சார்பில் தாக்கல்செய்யப்பட்ட மனுவில், "பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வில், தமிழ் மட்டுமல்லாமல், மொழிச் சிறுபான்மை மாணவர்கள், தங்கள் தாய்மொழி பாடத்தையும் சேர்க்கக் கோரிய வழக்கை உயர் நீதிமன்றம் விசாரித்தது.
அப்போது நீதிமன்றம், 'இது அரசின் கொள்கை முடிவு என்பதால், இது சம்பந்தமாக இரு மாதங்களில் அரசு ஆய்வுசெய்து உரிய முடிவை எடுக்க வேண்டும்' என 2017ஆம் ஆண்டு உத்தரவு பிறப்பித்தது" எனக் கூறப்பட்டுள்ளது.
இவ்வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல
"ஆந்திரா, கர்நாடகா, மேற்கு வங்க மாநிலங்களில் தமிழ் முதல் பாடமாகச் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் சிறுபான்மை மொழி கட்டாயமாக்கப்படவில்லை என்றால், அந்த மொழி மெள்ள அழிந்துவிடும் என்பதால் பத்தாம் வகுப்புத் தேர்வில் தமிழ் மொழிப் பாடத்துடன், சிறுபான்மை மொழிகளையும் கட்டாயமாக்கும் வகையில் சேர்க்க வேண்டும்" எனவும் அதில் கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு பொறுப்புத் தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, பத்தாம் வகுப்புத் தேர்வில் சிறுபான்மை மொழி பாடத்தேர்வு எழுத 2022 மார்ச் மாதம் வரை அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், 2017ஆம் ஆண்டு உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நடைமுறைப்படுத்தவில்லை என்றால் நீதிமன்ற அவமதிப்பு வழக்குதான் தொடர வேண்டும் எனவும், அடுத்தடுத்து வழக்குகள் தொடர முடியாது எனக் கூறி, இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல எனக் கூறி தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: அடுத்தவர் குழந்தையும் தங்களது என ஸ்டிக்கர் ஒட்டாதே விடியா அரசே! - இபிஎஸ்