தமிழ்நாடு அரசு 2021 -22ம் ஆண்டு வெளியிட்ட வேளாண் துறை கொள்கையில், விவசாயத்துக்கு இயந்திரங்களை பயன்படுத்த அறிவுறுத்தியுள்ளது.
இயந்திரங்களுக்கு பயன்படுத்தும் டீசல், பெட்ரோல் போன்ற எரிபொருட்களின் விலை தற்போது லிட்டருக்கு ரூ.100 அளவிலும் ஏற்கனவே உற்பத்திச் செலவு அதிகரிப்பு, குறைந்த விலைக்கு விளைபொருட்கள் கொள்முதல் ஆகிய காரணங்களால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு எரிபொருள் விலை உயர்வு கூடுதல் சுமையாக உள்ளது.
பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு நிர்ணயித்த போதும், அதன் மீது வாட் எனப்படும் மதிப்பு கூட்டப்பட்ட வரி மற்றும் உள்ளூர் செஸ் வரிகளை மாநில அரசு விதிக்கிறது. பீஹார் மாநிலத்தில் விவசாயிகளுக்கு மானிய விலையில் 1 லிட்டர் டீசல் 50 ரூபாய்க்கு வழங்கப்படுவதாகவும், கர்நாடகா மாநிலத்தில் மானியம் வழங்க முடிவு செய்துள்ளது.
தமிழ்நாட்டில் மீனவர்களுக்கு மானிய விலையில் டீசல் வழங்குவதைப் போல, விவசாயிகளுக்கும் மானிய விலையில், பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் வழங்க கோரி மத்திய - மாநில அரசுகளுக்கு அனுப்பிய விண்ணப்பத்தை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும் என திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையைச் சேர்ந்த அய்யா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு, ஏற்கனவே விவசாயிகளுக்கு
மண்ணெண்ணெய் உள்ளிட்ட பல பொருட்களை அரசு, மானிய விலையில் வழங்கி வருவதாகவும், பெட்ரோல் - டீசலை மானிய விலையில் வழங்குவது என்பது அரசின் கொள்கை முடிவு என்றும், இதுசம்பந்தமாக அரசு தான் முடிவெடுக்க வேண்டும் என்பதால் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது எனக் கூறி, தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இதையும் படிங்க: ஹிஜாப் அணியவில்லை என்றால் பாலியல் தொல்லை ஏற்படும் - காங்கிரஸ் எம்.எல்.ஏ. சர்ச்சை பேச்சு