கடந்த 2021ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி நடைபெற்ற அதிமுக உட்கட்சித் தேர்தலில் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிச்சாமி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இந்த தேர்தலை ரத்து செய்யக்கோரி அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி. பழனிசாமி தொடர்ந்த வழக்கு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது ஆஜரான எடப்பாடி பழனிசாமி தரப்பு வழக்கறிஞர், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்ட ஒருவர் உட்கட்சி விவகாரம் குறித்து வழக்குத் தொடர முடியாது என்பதால் கே.சி. பழனிசாமியின் மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இதற்குப் பதிலளித்த கே.சி. பழனிசாமி தரப்பு வழக்கறிஞர், நீக்கம் குறித்து முறைப்படி தகவல் தெரிவிக்கவில்லை என்பதால், அவரது நீக்கம் செல்லாது எனக் கூறினார். இந்த மனு எப்படி விசாரணைக்கு உகந்தது எனக் கேள்வி எழுப்பிய நீதிபதி, இதே விவகாரம் தொடர்பாக வேறு நீதிமன்றத்தில் மனு நிலுவையில் உள்ளதா எனக் கேள்வி எழுப்பினார்.
இதற்குப் பதிலளித்த கே.சி. பழனிசாமி தரப்பு வழக்கறிஞர், வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாகக் கூறினார். இதனையடுத்து உத்தரவு பிறப்பித்த நீதிபதி, உட்கட்சித்தேர்தலை எதிர்த்து கே.சி. பழனிசாமி மனுதாக்கல் செய்ய அவருக்குத்தகுதியில்லை என்பதால், அவரது மனுவை தள்ளுபடி செய்வதாகக் கூறினார்.
இதே விவகாரம் தொடர்பாக கீழமை நீதிமன்றங்களில் உள்ள வழக்குகளை அந்தந்த நீதிமன்றங்கள் விசாரித்து முடிவெடுக்கலாம் என நீதிபதி சி.வி. கார்த்திகேயன் தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: சுகேஷ் சந்திரசேகர் பணமோசடி வழக்கு... நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் 2ஆவது விசாரணைக்கு ஆஜர்...