பத்தாம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என முதலமைச்சர் அறிவித்ததைத் தொடர்ந்து, வரும் கல்வியாண்டிற்கான கட்டணத்தைச் செலுத்த வலியுறுத்துவது, இணையவழி வகுப்புகள் நடத்துவது, புதிய மாணவர் சேர்க்கை உள்ளிட்ட நடவடிக்கைகளில் தனியார் பள்ளிகள் ஆர்வம் காட்டி வருகின்றன.
இதுபோன்ற நடவடிக்கைகள் தொடர்பாக ஏற்கனவே விருதுநகர், கடலூர், கோயம்புத்தூர் உள்ளிட்ட சில மாவட்டங்களிலிருந்து புகார்கள் வந்ததாகவும், அதனடிப்படையில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் விசாரணை நடத்தி அறிக்கையை, இயக்குநர் அலுவலகத்தில் சமர்ப்பித்துள்ளதாகவும், மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநரக அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த அறிக்கைகளின் அடிப்படையில் விசாரித்து, புகார்கள் நிரூபிக்கப்பட்டால் பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்றும், ஏற்கனவே கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஒரு பள்ளியின் அங்கீகாரத்தை மாவட்ட ஆட்சியர் ரத்துசெய்து, அப்பள்ளிக்கு சீல் வைத்துள்ளதையும் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநரகம் சுட்டிக்காட்டியுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் சில பள்ளிகள் கட்டணம் செலுத்த கட்டாயப்படுத்திய விவகாரத்தில், குற்றத்தை உணர்ந்து இதுபோன்ற செயலில் இனி ஈடுபட மாட்டோம் என்ற அறிவிப்பை பள்ளிகளின் வாசலில் வைத்துள்ளதால், அவற்றின் மீது மேல் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: இந்தியாவின் சிறந்த கல்வி நிறுவனங்களில் சென்னை ஐஐடி-க்கு முதலிடம்!