இங்கிலாந்திலிருந்து வாங்கிவந்த ரோல்ஸ் ராய்ஸ் காரை பதிவு செய்ய கே.கே. நகர் வட்டாரப் போக்குவரத்து அலுவலருக்கு உத்தரவிடக்கோரி திரைப்பட இயக்குநர் ஷங்கர் சென்னை உயர் நீதிமன்றத்தில் 2012ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார். காருக்கு ஒரு கோடியே 72 லட்சம் ரூபாய் சுங்கக் கட்டணம் செலுத்தியும், நுழைவு வரி செலுத்தி தடையில்லாச் சான்று பெற்றால் மட்டுமே பதிவு செய்ய முடியும் என வட்டார போக்குவரத்து அலுலர் மறுத்துவிட்டதாக மனுவில் கூறியிருந்தார்.
வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு நுழைவு வரி செலுத்தத் தேவையில்லை என சென்னை உயர் நீதிமன்றமும், கேரள உயர் நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளதாக மனுவில் சுட்டிக் காட்டியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், முதல் கட்டமாக 15 விழுக்காடு நுழைவு வரியை செலுத்தி, காரை பதிவு செய்துகொள்ள இயக்குநர் ஷங்கருக்கு உத்தரவிட்டது.
இந்த வழக்கு நீதிபதி டி.ராஜா முன் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, 44 லட்சம் ரூபாய் நுழைவு வரி செலுத்த வேண்டியுள்ள நிலையில், இயக்குநர் ஷங்கர் ஆறு லட்சத்து 70 ஆயிரம் செலுத்தி தனது காரை பதிவு செய்துள்ளதாகவும், இதுபோல பல திரையுலக பிரபலங்கள், வெளிநாட்டு சொகுசு கார்களுக்கு முழு வரியும் செலுத்தாமல் பதிவு செய்துள்ளதாகவும், இதனால் அரசின் வரி வருவாய் பாதிக்கப்பட்டுவதாக அரசின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து வழக்கின் விசாரணையை நீதிபதி தள்ளிவைத்தார்.