பத்தாம் வகுப்பு மாணவர்களை காலாண்டு, அரையாண்டு தேர்வு மதிப்பெண் அடிப்படையில் தேர்ச்சி செய்வதற்கு முதலமைச்சர் உத்தரவிட்டார். அதேபோன்று 11ஆம் வகுப்பு மாணவர்கள் ஒரு தேர்வை எழுதாத நிலையில் அவர்களையும் இதே அடிப்படையில் தேர்ச்சி செய்வதற்கு உத்தரவிடப்பட்டது. இந்த நிலையில், தேர்வுத்துறை இயக்குநர் பழனிச்சாமி, மாணவர்களின் காலாண்டு , அரையாண்டு தேர்வு அசல் விடைத்தாள்களை தேர்வுத்துறை அனுப்பும் படிவத்துடன் இணைத்து தயாராக வைத்திருக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
பத்து லட்சம் மாணவர்கள் பத்தாம் வகுப்பு தேர்வை எதிர்நோக்கி காத்திருந்த நிலையில் தேர்வுகள் ரத்துசெய்யப்பட்டன. அவர்களின் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு விடைத்தாள்கள் என்றால் ஒரு கோடி விடைத்தாள்களை அனுப்பவேண்டும். 11ஆம் வகுப்பு மாணவர்கள் 8 லட்சம் பேருக்கு தலா ஒரு தேர்வு விடைத்தாள் எனில், 16 லட்சம் விடைத்தாள்களை அனுப்ப வேண்டும். ஏற்கனவே, அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களின் காலாண்டு, அரையாண்டு தேர்வு மதிப்பெண் விவரங்கள் பெறப்பட்டு, கல்வித்தகவல் மேலாண்மை இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது. இதை அப்படியே தேர்வுத்துறை பெற்று பின்னர் தேர்வு முடிவுகளை வெளியிடலாம்.
இது குறித்து ஆசிரியர்கள் கூறும்போது, பள்ளியில் படித்த மாணவர்களின் காலாண்டு, அரையாண்டு விடைத்தாள்கள் எப்போதும் வைத்திருக்கமாட்டோம். தனியார் பள்ளிகளில் அரசு அளிக்கும் வினாத்தாள் வைத்து தேர்வை நடத்துவது கிடையாது. மாணவர்களுக்கு வேறு வினாத்தாள் வைத்து தேர்வு நடத்துகின்றனர். இது போன்ற நிலையில் ஒரே மாதிரி மதிப்பெண்கள் போடுவது சரியாக இருக்காது” என்றனர்.
இதையும் படிங்க: நீட் தேர்வு பயிற்சிக்கு கட்டணமில்லா இணையதள பயிற்சி: முதலமைச்சர் தொடங்கிவைப்பு