கரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால் காய்கறிகள், பழங்கள் போன்ற விவசாய பொருட்களை விற்பனை செய்ய முடியாமல் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளிடமிருந்து விளைபொருட்களை நேரடியாக கொள்முதல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட கோரி வழக்கறிஞர் ராஜேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அதில், விளைபொருட்களை விற்பனைக்கு கொண்டு செல்ல முடியாமல் விளைநிலங்களில் அவற்றை அழிக்கும் விவசாயிகள் எதிர்காலத்தில் பயிரிட முடியாத நிலைக்கு தள்ளப்படுவார்கள். விளை பொருட்களை விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்ய தாலுகா அளவில் குழுக்கள் அமைக்க வேண்டும் எனவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கு நீதிபதி கிருபாகரன் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தபோது தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன், விளைபொருட்களை நேரடியாக கொள்முதல் செய்வதற்காக மாவட்ட அளவில் குழுக்கள் அமைத்து முதல்வர் அறிவித்துள்ளதாகவும் இந்த குழு அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளதாகவும் இந்த தொலைபேசி எண்களை தொடர்புகொண்டு விவசாயிகள் பயனடைந்து கொள்ளலாம் எனவும் தெரிவித்தார்
இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் தகவல் தொழில்நுட்பத் துறை வீழ்ந்து விடலாம் ஆனால் வேளாண் துறையை அப்படி அனுமதிக்க முடியாது எனவும், தற்போதுதான் நாம் விவசாயத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்துள்ளதாகவும் கருத்து தெரிவித்தனர்.
பின்னர், விவசாயிகளின் நலனுக்காக அரசு அறிவித்துள்ள சலுகைகள் குறித்து விரிவாக விளம்பரம் செய்ய தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் தமிழ்நாடு அரசு இதுகுறித்து இரண்டு வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.