சென்னை: அதிமுகவில் ஜூன் 23 ஆம் தேதி பொதுக்குழு நடைபெறும் நிலையில் ஒற்றைத் தலைமை கோஷங்கள் எழுந்துள்ளன. நேற்று ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பொதுக்குழுவில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் குறித்து ஆலோசனை மேற்கொண்ட பொழுது ஒற்றைத் தலைமை வேண்டும் என மாவட்ட செயலாளர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் காரசார விவாதம் நடைபெற்றது.
இன்று சென்னையில் உள்ள இல்லத்தில் 2ஆவது நாளாக ஆதரவாளர்களுடன் ஓபிஎஸ் ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்த ஆலோசனையில் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், எம்எல்ஏ மனோஜ் பாண்டியன், தேனி மாவட்ட செயலாளர் சையது கான் உள்ளிட்ட நிர்வாகிகளும் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில், ஒற்றைத் தலைமையை கொண்டு வருவது தொடர்பாக மறுபுறம் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். அதன்படி, சென்னையில் உள்ள ஈபிஎஸ் வீட்டில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் தங்கமணி, வேலுமணி, விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ள நிலையில் ஆலோசனை மேற்கொள்ளப்படுகிறது.
இதன் தொடர்ச்சியாக காரில் ஏறும்பொழுது செய்தியாளர்களிடம் பேசிய திண்டுக்கல் சீனிவாசன், பேச்சுவார்த்தை நடந்துகொண்டு வருகிறது. என்னுடைய ஆதரவு எடப்பாடி பழனிசாமிக்கு தான் என உறுதியாக தெரிவித்து சென்றார். ஒற்றைத் தலைமைக்கு யார் தேர்வு செய்யப்படுவார்கள் குறித்து 'wait and see' எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: குடியரசுத் தலைவர் தேர்தல்: சரத் பவார் மறுப்பு - பொது வேட்பாளர் யார்?