பள்ளிக் கல்வித்துறை ஆணையர் பணி என்ன?
தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை இயக்குநர்களைக் கண்காணிக்க புதிதாக ஆணையர் பதவி உருவாக்கப்பட்டது. அந்தப் பதவியில் முதன்முதலாக 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சிஜி தாமஸ் வைத்யன் நியமிக்கப்பட்டார்.
பள்ளிக்கல்வித்துறைச் செயலாளர் அவருக்கு ஒதுக்கீடு செய்த பணிகளில், பள்ளிகளின் கற்பித்தல் செயல்பாட்டை மேம்படுத்தவும், பள்ளிக்கல்வியில் நடைமுறையில் உள்ள திட்டங்களும், புதிதாக அறிமுகப்படுத்தப்படும் திட்டங்களும் முறையாக செயல்படுத்தப்படுகிறதா என்பதைக் கண்காணிக்கவும், பள்ளிக் கல்வியின் தரத்தை மேம்படுத்தும் வகையிலும் செயல்படுவார்.
பள்ளிக்கல்வி, தொடக்கக்கல்வி, மெட்ரிக் பள்ளிகள், தேர்வுத்துறை ஆகிய 4 இயக்குநரகங்களையும் ஒருங்கிணைத்து சீரான நிர்வாகத்தை ஆணையர் வழங்குவார். பள்ளிகளுக்கு நேரடியாகச் சென்று ஆய்வு செய்வதுடன், துறை சார்ந்த வழக்குகள் இனி ஆணையர் மூலமாகவே மேற்கொள்ளப்படும் என உத்தரவிடப்பட்டது.
அவரைத் தொடர்ந்து அந்தப் பதவியில் வெங்கடேஷ் நியமனம் செய்யப்பட்டார். அவர் தனது விருப்பத்தின் அடிப்படையில் ஆந்திராவிற்கு பணியிட மாறுதல் பெற்றுச் சென்றார். இந்த நிலையில் புதிய ஆணையராக நந்த குமாரை நியமனம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கு பள்ளிக்கல்வித்துறை ஆசிரியர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
அரசு அலுவலர் சங்கங்களின் அறிக்கைகள்
- தமிழ்நாடு கல்வித்துறை அரசு அலுவலர் சங்கத்தின் மாநிலத் தலைவர் அதிகமான்முத்து முதலமைச்சருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில்:
"பள்ளிக்கல்வித் துறைக்கு ஆணையராக நந்தகுமாரை நியமனம் செய்து தலைமைச் செயலாளர் ஆணை பிறப்பித்துள்ளார். ஆனால், அந்த அரசாணையில் பள்ளிக்கல்வி இயக்குநர் கண்ணப்பனுக்குப் பதிலாக நியமனம் செய்துள்ளதாக வெளிவந்துள்ளது. ஒட்டுமொத்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் மத்தியில் இத்தகவல் பேரதிர்ச்சியினை ஏற்படுத்தி உள்ளது.
கல்வித்துறை ஆணையர் பதவி வேறு, கல்வித்துறை இயக்குநர் பதவி வேறு ஆகும். ஆனால், இயக்குநர் பதவியை ரத்து செய்துவிட்டு ஆணையர் பதவியினை நியமனம் செய்துள்ளதன் உள்நோக்கம் அனைத்து இயக்குநர் பதவிகளுக்கும் மாற்று ஏற்பாடு செய்துவிட்டு, முழு அதிகாரத்தையும் இந்திய ஆட்சிப் பணியாளர் அலுவலர்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வருகிற ஆபத்து இருப்பதாக உணர்கிறோம்.
பிரிட்டிஷ் ஆட்சியில் மெட்ராஸ் ராஜதானியில் இருந்த இன்றைய நான்கு மாநிலங்களை உள்ளடக்கிய கல்வித்துறையை திறம்பட நடத்த, கி.பி.1800இல் ஏற்படுத்தப்பட்ட பதவிதான் பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் பதவி.
கடந்த ஆட்சியில் உருவாக்கப்பட்ட பள்ளிக்கல்வி ஆணையர் பதவியை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களும் ஒரு மனதாக எதிர்த்தன. கண்டன அறிக்கைகள் வெளியிட்டன. ஆனால் கடந்தகால அரசு ஏதேச்சதிகாரமாக இரட்டையாட்சியை ஏற்படுத்தி பள்ளிக்கல்வித்துறையின் மாண்பை சிதைத்தது.
புதிய அரசு பள்ளிக்கல்வி இயக்குநர் பதவியைக் காத்து புதிய ஆணையர் பதவியை நீக்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த கல்வியாளர்களின் விருப்பம். இதை புதிய முதலமைச்சர், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ஆகியோர் செய்வார்கள் என நம்புகிறோம்" என்று அதில் கூறியுள்ளார்.
- ஐபெட்டோவின் அகில இந்தியச் செயலாளர் வா.அண்ணாமலை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்:
"முதலமைச்சரின் முதன்மைச்செயலாளர் அரசின் கொள்கை முடிவினை அவரே எடுத்து அமல்படுத்த துணிவார் என்பது பல்வேறு காலகட்டங்களில் அறிந்த ஒன்றுதான். அதிமுக அரசில் கல்வியை சீர்திருத்தம் செய்வதாக எண்ணி சீர்குலைத்து சென்றுவிட்டனர். ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆனவுடன் முந்தைய அரசில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்குத் தீர்வு காண்போம் என்ற நம்பிக்கையில் இருக்கிறபோது, இப்படி ஒரு புது பாதிப்பினை ஏற்படுத்தி இருப்பது வேதனை அளிக்கிறது" எனக் குறிப்பிட்டுள்ளார்.
- தமிழ்நாடு உயர் நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்:
"பிரிட்டிஷ் ஆட்சியில் மெட்ராஸ் ராஜதானியில் இருந்த இன்றைய நான்கு மாநிலங்களில் உள்ளடக்கிய கல்வித்துறையை திறம்பட நடத்திட கி.பி.1800இல் ஏற்படுத்தப்பட்ட பதவிதான் பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் பதவி. சென்ற ஆட்சியின் அலங்கோலங்களில் முதன்மை பெற்றது பள்ளிக் கல்வித் துறையில் ஏற்பட்ட குளறுபடிகள்.
வரலாற்றுச் சிறப்புமிகு 220 ஆண்டுகால பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் பதவியை, அதன் மாண்பைக் காக்க புதிய வரலாறு படைக்க முனைந்திருக்கும் புதிய அரசு பள்ளிக்கல்வி இயக்குநர் பதவியைக் காத்து, புதிய ஆணையர் பதவியை நீக்க வேண்டும்’ என அதில் கூறியுள்ளனர்.
இதையும் படிங்க: பள்ளிக்கல்வித்துறை இயக்குநரின் அதிகாரங்கள் ஆணையருக்கு மாற்றம்!