சென்னையிலுள்ள தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் நேற்று நீரிழிவு விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது. இதனை டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தரும், நீரிழிவு வல்லுநருமான சாந்தாராம் தொடங்கிவைத்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் பேசும்போது, "சில வருடங்களுக்கு முன்பு 40, 50 வயதிற்கு மேற்பட்டவர்கள்தான் நீரிழிவால் பாதிக்கப்பட்டனர். ஆனால் தற்பொழுது 30 வயதிற்கு உட்பட்டவர்களும் பள்ளி மாணவர்களும் நீரிழிவால் பாதிக்கப்படுகின்றனர்.
உடல் பருமன் அதிகளவில் இருப்பதாலும், தற்பொழுது மாறியுள்ள உணவு பழக்கவழக்கத்தாலும் குழந்தைகளுக்குகூட நீரிழிவு ஏற்படுகிறது. பாரம்பரிய உணவு பழக்கத்திலிருந்து மாறி பீட்சா, பர்கர் போன்ற உணவுப் பொருட்களை சாப்பிடுவதும் இதற்கு முக்கியக் காரணம்.
அதேபோல் உடற்பயிற்சி இல்லாமல் இருப்பதும், குழந்தைகளை படிக்கச் சொல்லி பெற்றோர்கள் அளிக்கும் மன அழுத்தமும் நீரிழிவு வருவதற்குக் காரணமாக அமைகிறது" என அதிர்ச்சித் தகவலை தெரிவித்தார்.