தேர்தல் தேதி அறிவித்ததும் பல தொழில்கள் புத்துணர்ச்சி அடைந்துவிடும். குறிப்பாக கலைஞர்களுக்கும் ஓவியர்களுக்கும் அது திருவிழா காலம்தான். தேர்தல் என்றவுடன் நமக்கு ஞாபகம் வருவது அரசியல் கட்சிகளின் சின்னங்கள். இந்தச் சின்னங்களை பொதுமக்கள் மத்தியில் கொண்டு செல்லும் பெரும் பொறுப்பை ஓவியர்கள் செய்துவருகின்றனர். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த சுவர் ஓவிய பரப்புரைக்கு 2011ஆம் ஆண்டு தேர்தல் ஆணையம் தடை விதித்தது.
இந்தச் சட்டத்தின்படி:
(அ) பொது இடங்கள்
அரசு வளாகங்களில் உள்ள கட்டடங்களின் சுவரில் எழுதுதல், சுவரொட்டிகள் ஒட்டுதல் உள்ளிட்ட ஏனைய பிற வடிவில் அழகை சீர்குலைத்தல் அனுமதிக்கப்படவில்லை. 1959ஆம் ஆண்டு தனியார், பொது இடங்களில் தமிழ்நாடு திறந்தவெளிகள் (அழகை சீர்குலைத்தல்) சட்டப்பிரிவு 4 (அ) இன்படி சென்னை, மதுரை, கோயம்புத்தூர் உள்ளிட்ட மாநகரங்களில் நிபந்தனைகளுடன் தட்டிகள், கொடிக்கம்பங்கள் வைக்க அனுமதி வழங்கப்பட்டன.
(ஆ) தனியார் இடங்கள்
1959ஆம் ஆண்டு தனியார், பொது இடங்களில் தமிழ்நாடு திறந்தவெளிகள் (அழகை சீர்குலைத்தல்) சட்டப்பிரிவு 2 இன்படி பொதுமக்களின் பார்வையில் படும் இடங்கள் என்பன தனியாருக்குச் சொந்தமானவை. எனவே, பொது இடங்களில் சுவர்களில் வரைதல், சுவரொட்டி ஒட்டுதல் போன்றவற்றிற்கு வீட்டு உரிமையாளரின் அனுமதி இருந்தாலும்கூட செய்யக்கூடாது. கிராமப்புறங்களைப் பொறுத்தவரை உரிமையாளரின் எழுத்து மூலமான அனுமதியோடு சுவர்களில் எழுதுதல், வரைதல், சுவரொட்டிகள் ஒட்டுதல், கட்அவுட் வைத்தல், கொடிக்கம்பங்கள் ஆகியவை இடையூறு இல்லாத வகையில் அனுமதிக்கப்படுகின்றன. இந்த தடையால் பல ஓவியர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்தனர். சுவர் ஓவியத்துக்கு விதிக்கப்பட்ட தடைக்கு முன்னர் தேர்தல் நேரத்தில் எங்கள் வாழ்வாதாரம் சிறப்பாக இருந்தது எனவும் தடைக்கு பிறகு எங்கள் வாழ்வாதாரம் முழுவதும் அழிந்துவிட்டது என ஓவியர்கள் வேதனையுடன் கூறுகின்றனர்.
இது தொடர்பாக நம்மிடம் பேசிய ஓவியர்கள், "எங்களுக்கு இந்த தொழில் மட்டுமே தெரியும் வேற எந்த தொழிலும் தெரியாது. ஆனால் தற்போது அதற்கு தடை உள்ளது. தனியார் சுவர்களில் ஓவியம் வரைய தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதை அரசாங்கம் அழுத்தமாக கூறவேண்டும். அப்போது தான் மக்களுக்கு சென்றடையும். காங்கிரஸ், பாஜக, அதிமுக, திமுக ஆகிய கட்சிகள் மட்டுமே மக்களுக்கு தெரியும் .
ஆனால் சுயேச்சையாக போட்டியிடும் வேட்பாளர்கள் சின்னம் மட்டும் பெயர் எங்கள் மூலமாகவே மக்களுக்கு சென்று சேரும். இந்த தடையால் வேட்பாளர்களுக்கு மட்டுமின்றி மக்களுக்கும் சிரமம் ஏற்பட்டுள்ளது. லட்சக்கணக்கான ஓவியர் இந்த தொழிலை நம்பி இருக்கின்றனர். பழைய முறையை மீண்டும் கொண்டுவரவேண்டும் அல்லது தனியார் சுவர்களில் ஓவியம் வரைய அனுமதி வழங்கினால் எங்கள் வாழ்வாதாரம் சற்று அதிகரிக்கும்" எனத் தெரிவித்தனர்.
மேலும், ’இந்தத் தடை ஒருபுறம் இருக்க டிஜிட்டல் பேனர் கலாசாரம் அதிகரிக்க தொடங்கிவிட்டது. இதனால் ஓவியர்களுக்கு இருந்த மற்றொரு வாய்ப்பு பறிக்கப்பட்டுள்ளது. நாங்கள் 2 அல்லது 3 நாட்கள் வரையும் ஓவியத்தை 30 நிமிடத்தில் பேனர் போட்டுவிடுகின்றனர். இதனால் எங்கள் வாழ்வாதாரம் மேலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது’ என்கிறார்கள் வண்ணம் இழந்த முகத்தோடு.