நாடு முழுவதும் ஒமைக்ரான் வகை கரோனா பரவி வருவதனை கருத்தில் கொண்டு ஒவ்வொரு மாநிலமும் தேவையான முன்னேற்பாடுகளை செய்து வருகின்றன. இந்நிலையில் புதுச்சேரி கோவிட் மேலாண்மை உயர்நிலைக்குழு கூட்டம் நேற்று (ஜன. 3) துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தலைமையில் நடைபெற்றது.
அப்போது கூட்டத்தில் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பேசியதாவது:
•மூன்றாவது அலைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள சூழ்நிலையில், புதுச்சேரியில் கோவிட் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்த வேண்டும்.
•புதுச்சேரியில் நேற்று (ஜன.3) முதல் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்க வேண்டும்.
•மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சையுடன் கூடிய பிற அவசிய சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சைகளையும் செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
•மருத்துவமனையில் படுக்கை வசதிகளை அதிகப்படுத்த வேண்டும். தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கும் அறிவுறுத்த வேண்டும். அவரசகால மருத்துவ சேவைக்கு பயன்படுத்தும் வகையில், மருத்துவம் இறுதி ஆண்டு பயிலும் மாணவர்கள், பயிற்சி மருத்துவர்கள் ஆகியோருக்கு சிறப்பு பயிற்சி அளிக்க வேண்டும்.
•கரோனா நோய்ப்பரவல் குறித்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் மருத்துவமனைகளைக் கண்காணிக்க வேண்டும். மருத்துவமனைகளில் படுக்கைகள், பிராணவாயு படுக்கைகள், வென்டிலேட்டர்கள், மருந்துகள் உள்ளிட்டவற்றை தயார் நிலையில் வைக்க வேண்டும். மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்களை தயார்படுத்த வேண்டும்.
•மக்கள் கூடும் இடங்களில் கோவிட் பரிசோதனைகளினை அதிகரிக்க வேண்டும். திரையரங்குகள், கடைவீதிகள், பேருந்துகள், கலையரங்கங்கள் ஆகியவற்றில் 50% மட்டும் அனுமதிக்கும் வகையில் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும்.
•தொற்றுப் பரவலை முற்றிலுமாக கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து அரசுத் துறைகளையும் இதில் ஈடுபடுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படிங்க: TN Firing Range Case: 'குண்டு பாய்ந்து சிறுவன் மரணம்; தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை'