சென்னை: போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "அண்மைக்காலமாக பெரும்பாலான இருசக்கர வாகனங்களின் பதிவெண் பலகைகள் மோட்டார் வாகன விதிகளுக்குப் புறம்பாக இயங்கி வருவதாக புகார்கள் எழுந்தன. குறிப்பாக மடக்கி வைக்கும் பதிவு எண் பலகைகளை பயன்படுத்துவது, அதன் மூலம் விதிமீறல்களில் ஈடுபடுவது, விபத்துகளை ஏற்படுத்தி நிற்காமல் செல்வது போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. மடக்கி வைக்கும் பதிவு எண் பலகைகளை கொண்ட வாகனங்களை இயக்கி குற்றச் செயல் புரிவதன் மூலம், அவற்றின் பதிவு எண்களை கண்டறிய முடியாததால் குற்றவாளிகளை பிடிப்பதில் தொய்வு ஏற்பட்டதாகத் தெரிகிறது. அதுமட்டுமல்லாமல் சென்னையில் பெரும்பாலான இடங்களில் பொதுமக்கள் வாகனங்களை சாலையோரங்களில் நிறுத்திவிட்டுச் செல்வதும், அதன் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதும் அதிகரித்துள்ளது.
இவற்றுக்குத் தீர்வு காணும் வகையில் சென்னை போக்குவரத்து காவல்துறை சார்பில் சிறப்பு நடவடிக்கையாக, நேற்று(01/05/2022) சிறப்பு வாகனத் தணிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அதில், குறைபாடுள்ள பதிவெண் பலகைகள் கொண்ட 821 வாகனங்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் 9 வழக்குகள் மடக்கி வைக்கும் பதிவெண் பலகை பயன்படுத்தியதற்காக பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், அனுமதிக்கப்படாத இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 215 வாகனங்கள் கைப்பற்றப்பட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. வாகன ஓட்டிகள் மோட்டார் வாகன விதிகளுக்குட்பட்டு பதிவு எண் பலகைகளை பொருத்த வேண்டும். அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே வாகனங்களை நிறுத்த வேண்டும். இதுபோன்ற சிறப்பு நடவடிக்கைகள் தொடரும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.