கரோனா வைரஸ் நாடெங்கும் பரவி வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகிறது அரசு இயந்திரங்கள். இதற்காக மக்கள் அதிகம் கூடும் இடங்கள் செயல்பட தடைகள் விதிக்கப்பட்டுள்ளதுடன், பொதுமக்கள் வெளியூர் பயணங்களை தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கரோனா வைரஸ் எங்கிருந்து பரவியது என்பதைவிட அது மிருகங்களிடமிருந்து பரவியிருக்கலாம் என்ற அச்சம் மக்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. இருப்பினும் மக்கள் தேவையற்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என அரசுத் தரப்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சென்னை நகரில் உள்ள ஆடு மற்றும் கோழி இறைச்சிக் கடைகளில் மக்கள் இறைச்சி வாங்குவதை பெருமளவு தவிர்த்து வந்ததுடன், மீன் உள்ளிட்ட கடல் உணவுகளை வாங்கக் குவிந்தனர். ஆனால் கடந்த இரண்டு நாட்களாக கரோனா பற்றிய அச்சம் மக்கள் மத்தியில் அதிகரித்துள்ள நிலையில், மீன் விற்பனையும் வெறிச்சோடிய நிலையில் உள்ளது.
எப்போதும் மக்கள் கூட்டத்துடன் காணப்படும் பட்டினப்பாக்கம் மீன் கடைகள் பெருமளவில் மூடப்பட்டுள்ளன. மீன் விற்பனை முடங்கியுள்ளதால் மீனவர்கள் பெரும் கலக்கம் அடைந்துள்ளனர். ஆனால், கரோனா குறித்த எந்தவித அச்சமுமின்றி இருக்கின்றனர் மீனவர்கள். சுனாமியே தங்களை ஏதும் செய்ய முடியவில்லை, இந்த வைரஸ் என்ன செய்துவிடும் என்று கூறும் மீனவர்கள், கடல்நீர் உப்பிலும், உப்புக் காற்றிலும் வாழ்ந்து வருவதால் எங்களிடம் கரோனா வைரஸ் நெருங்க வாய்ப்பில்லை என்று தன்னம்பிக்கையுடன் கூறுகின்றனர்.
இதுபோன்ற வேளைகளில் பிற மாமிச உணவுகளை உட்கொள்வதைவிட கடல் உணவுகளான மீன்கள் மேலானவைதான் என்கிறார் மற்றொரு மீனவர். உப்புக் காற்றும், கடுமையான வெப்பமும் தங்களுக்கு நோய் கிருமிகளை எதிர்க்கும் ஆற்றலை கொடுக்கும் என்று கூறும் இவர்களின் நம்பிக்கை மெய்ப்படட்டும்.
இதையும் படிங்க: கரோனா வைரசிலிருந்து காக்க சென்னையில் தன்வந்திரி யாகம்!