சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (ஏப்.8) விவாதத்தின்போது, நியாய விலைக்கடையில் வழங்கப்பட்ட பொங்கல் பரிசுப்பொருட்கள் தரமில்லாததாக இருந்ததாக மானியக்கோரிக்கை விவாதத்தின் மீது பேசும்போது அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் செல்லூர் ராஜூ தெரிவித்தார். அதற்கு மறுப்புத் தெரிவித்து பேசிய உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, 'எந்த அடிப்படையில் தரமில்லாத பொருட்கள் என உறுப்பினர் சொல்கிறார்? ஒரு பொருள், இரண்டு பொருள் அல்ல ரூ.46 கோடி மதிப்புள்ள பொருட்களை முதலமைச்சர் வழங்கினார். முதலமைச்சர் அரசின் மீது எந்த குற்றச்சாட்டும் கூற முடியாது? ஊதிப் பெருசாக்கிவிட்டீர்கள்.
தவறான தகவல்: உள்ளாட்சித்தேர்தலில் மக்கள் நல்ல தீர்ப்பை வழங்கினார்கள். 2 இடங்களில் தான் தவறு நடந்தது. டெண்டர்களில் 16, 17 பேர் கலந்துகொள்ளும் வகையில் டெண்டரில் கலந்துகொள்கின்றனர்' எனக் கூறினார்.
அதனைத் தொடர்ந்து பேசிய சட்டபேரவை எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி, 'பல இடங்களில் பொங்கல் தொகுப்பில் முறைகேடு நடந்தது' எனத் தெரிவித்தார். அதற்கு அமைச்சர் சக்கரபாணி, 'அதிமுக ஐடி விங்கை வைத்து தவறான தகவல் பரப்பப்பட்டது. யார் தவறு செய்தாலும் நடவடிக்கை எடுக்க அரசு தயங்காது' எனத் தெரிவித்தார்.
அமைச்சரின் பதில்: மீண்டும் பேசிய சட்டப்பேரவை எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி, 'திருவண்ணாமலை ஆட்சியரே குடோனுக்கு சென்று பொருட்கள் கொடுக்க வேண்டாம் என தடை செய்தார்' என்று குறிப்பிட்டார். அதற்குப்பதில் அளிக்கும் விதமாக அமைச்சர் எ.வ.வேலு, 'திருவண்ணாமலை மாவட்டத்தில் அனைத்து கார்டுகளுக்கும் முறையாக சென்று சேர்ந்தது. குடோனில் காற்றோட்டம் இல்லையென்றால் கசிவு ஏற்படும் என்பது உண்மை. வெல்லம் என்பது கசிவுத்தன்மை உள்ளது என எல்லா விவசாயிக்கும் தெரியும்' என்று பதில் தெரிவித்தார்.
இவ்வாறாக காரசார விவாதம் முடிவு அடைந்து மீண்டும் செல்லூர் ராஜூ மானியக்கோரிக்கை விவாதம் மீது பேசத் தொடங்கினார்.
இதையும் படிங்க: தரமற்ற பொங்கல் பரிசுகள்: அமைச்சர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப சொன்ன உயர் நீதிமன்றம்