சென்னை: கரோனா தடுப்பூசி இரண்டு தவணைகளும் செலுத்திக்கொண்டவர்கள் இரண்டாம் தவணை முடிந்து ஒன்பது மாதம் கழித்து பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என அரசு அறிவித்திருந்தது.
அதன்படி தற்போது முதற்கட்டமாக முன்களப் பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டுவருகிறது. அதேபோல் இரண்டாம் தவணை தடுப்பூசி போட்டுக்கொண்ட பொதுமக்கள் பூஸ்டர் தடுப்பூசி போடுவதற்குப் பல்வேறு ஏற்பாடுகளை அரசு செய்துள்ளது.
இந்த நிலையில் பூஸ்டர் டோஸ் போடுவதற்கு விருப்பம் தெரிவிப்பவர்கள் செல்போன் எண்ணிற்கு லிங்க் ஒன்றை அனுப்பி, அதில் விவரங்களைப் பதிவிடுமாறு கோரி செல்போன் எண்ணிற்கு வரும் ஒருமுறை கடவுச்சொல் (OTP) கேட்டுப் பெற்று நூதன முறையில் புதிய மோசடி செய்வதாக காவல் துறையினர் எச்சரித்துள்ளனர்.
லிங்க், ஓடிபி மூலம் செல்போனைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை மோசடி செய்வதாக சைபர் கிரைம் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதுபோன்று செல்போன் அழைப்புகள், குறுஞ்செய்திகளை நம்பாதீர்கள் எனவும், லிங்குகளைப் பதிவிறக்கம் செய்யாதீர்கள் எனவும் சைபர் கிரைம் காவல் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: கோவிட் பாதிப்பு அதிகரிப்பு, பிரதமர் மோடி இன்று ஆலோசனை!