சென்னை: நாமக்கல் ஞானமணி தொழில்நுட்பக் கல்லூரியில் அமைக்கப்பட்ட தேர்வு மையத்தில் பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கான தேர்வு கம்ப்யூட்டர் முறையில் நடைபெற்றது.
அப்போது தேர்வு எழுதிய பெண் தேர்வர் ஒருவர் கணக்கிடுவதற்காக அளிக்கப்பட்ட வெள்ளைத்தாளை (rough sheet) பயன்படுத்தி கம்ப்யூட்டர் திரையில் தோன்றிய வினாக்களை பதிவு செய்துள்ளார்.
மேலும், தேர்விற்கான விதிகளை மீறி தேர்வு முடிந்தப் பின்னர் வெளியில் வந்த அவர், தேர்வு வினாத்தாள் முன்கூட்டியே வெளியானதாக சமூக வலைதளங்களில் பரப்பியுள்ளார். இது குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் தீவிர விசாரணை நடத்தியது.
விசாரணையில், தேர்வுக்கு முன் எந்தவிதமான வினாத்தாள் வெளியாகவில்லை என்றும், கேள்வித்தாள் வெளியானதாக தவறான தகவல்கள் பரப்பியவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்றைய தினம் முடிவு செய்தது.
மேலும், தேர்வு விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக நாமக்கல்லைச் சேர்ந்த பூர்ணிமா தேவிக்கு தேர்வு எழுத வாழ்நாள் தடை விதித்து ஆசிரியர் தேர்வு வாரியம் உத்தரவிட்டது.
இதைதொடர்ந்து, கேள்வித்தாள் வெளியானதாக தகவலை வெளியிட்ட நாமக்கல்லைச் சேர்ந்த பூர்ணிமா தேவி என்ற தேர்வர் மீதும், சமூகவலைதளத்தில் தவறான தகவல்களை பரப்பியவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கக் கோரி டிஜிபியிடமும், காவல் ஆணையர் அலுவலகத்திலும் ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அந்த புகாரின் பேரில் சென்னை மத்தியக்குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல் துறையினர் முதற்கட்ட விசாரணையை தொடங்கி உள்ளனர்.
இதையும் படிங்க: வெளியுலகிற்கு மசாஜ்... உள்ளே மஜா: 6 அழகிகள் உள்பட 9 பேர் கைது