சென்னை: கரோனா காரணமாக சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள வழக்குகள் காணொலி காட்சி வாயிலாக நடைபெற்று வருகிறது வழக்கு விசாரணை நடந்து கொண்டிருக்கும்போது, வழக்கறிஞர் ஒரு பெண்ணுடன் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட காணொலி இணையத்தில் வெளியானது.
உயர் நீதிமன்ற நீதிபதி வழக்கு விசாரணையை நடத்திக் கொண்டிருக்கும்போது, ஆபாசமாக பெண் ஒருவரிடம் மற்றொரு வழக்கறிஞர் நடந்துகொண்ட விவகாரத்தை தாமாக முன்வந்து உயர் நீதிமன்றம் வழக்கு தொடர்ந்து விசாரணை நடத்தியது.
காவல்துறைக்கு உத்தரவு
நீதிமன்ற மாண்புக்கு கேடு விளைவிக்கும் வகையில் நடைபெற்ற இந்த விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதே நேரத்தில் குறிப்பிட்ட காணொலி சமூக வலைதளங்கள் மூலம் பரவாமல் இருக்க சென்னை காவல்துறை நடவடிக்கை எடுக்கவும் உத்தரவு பிறப்பித்திருந்தது.
இடைநீக்கம்
அதன் அடிப்படையில் சென்னை சைபர் கிரைம் காவலர்கள் சமூக வலைதளங்களில் இந்த காணொலியின் பரவல் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். இந்த காணொலி வைரலாக பரவி இருந்த காரணத்தினால், முக்கிய சமூக வலைதளங்களுக்கு சென்னை சைபர் கிரைம் காவல்துறை கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
குறிப்பாக பேஸ்புக், யூடியூப், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களுக்கு இந்த காணொலி வெளியானால் உடனடியாக தடை செய்யக்கோரி கடிதம் அனுப்பியுள்ளது. இந்த காணொலி பரவாமல் இருக்க தொடர்ந்து கண்காணித்தும் வருகின்றனர்.
இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தும் பணியில் சிபிசிஐடி காவலர்கள் தீவிரமாக இறங்கியுள்ளனர். மேலும், வழக்கு விசாரணையின்போது ஒழுங்கீனமாக நடந்துகொண்ட சம்பந்தப்பட்ட வழக்கறிஞரை பார் கவுன்சில் இடைநீக்கம் செய்ததும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பெண்ணிடம் ஒழுங்கீனமாக நடந்த வழக்கறிஞர் - நீதிமன்றம் அதிரடி உத்தரவு