அரசியல் என்றாலே வழக்கு, சிறை இவை இருக்கத்தான் செய்யும். இந்திய விடுதலைக்கு போராடிய காந்தி, நவீன இந்தியாவின் சிற்பி என்றழைக்கப்படும் நேரு, சுதேசி கப்பல் கண்டு செக்கிழுத்த வஉசி, ஏற்றத்தாழ்வற்ற சமூகம் உருவாக போராடிய தந்தை பெரியார் உள்ளிட்டோர் பார்க்காத வழக்கோ, காணாத சிறையோ இருந்திருக்கவில்லை. அந்த வகையில் தற்போதைய முக்கிய அரசியல் தலைவர்கள் குறிப்பாக மக்கள் பிரதிநிதிகள் மீதான வழக்குகளும், அவற்றின் தற்போதைய நிலையும் குறித்த தொகுப்பு.
எடப்பாடி பழனிசாமி, முதலமைச்சர் (அதிமுக) :
ஒட்டன்சத்திரம்-தாராபுரம்-அவினாசிபாளையம் வரையான 70.20 கிமீ தூர 4 வழிச்சாலை அமைக்கும் ஒப்பந்தப்பணி, முதலமைச்சரின் உறவினர் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டு, 200 கோடி ரூபாய் திட்டத்திற்கு 1,515 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்ட வழக்கு.
இதேபோல், நெல்லை-செங்கோட்டை-கொல்லம் வரையிலான 45.64 கிமீ தூர 4 வழிச்சாலை அமைக்க, 900 கோடி ரூபாய் ஒப்பந்தப்பணி முதலமைச்சரின் சம்பந்தி சுப்பிரமணியத்திற்கு சொந்தமான நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது குறித்து, திமுகவின் ஆர்.எஸ்.பாரதி உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு, லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணையில் உள்ளது.
எஸ்.பி.வேலுமணி, உள்ளாட்சித்துறை அமைச்சர் (அதிமுக) :
2011 முதல் 2016ஆம் ஆண்டுவரை மாநகராட்சி டெண்டர் ஒதுக்கியதில் முறைகேடு செய்ததால், அரசுக்கு 350 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்படுத்தியதாக இவர் மீது, திமுகவின் ஆர்.எஸ்.பாரதி உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை, லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை செய்து வருகிறது.
விஜயபாஸ்கர், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் (அதிமுக) :
கடந்த 2017ஆம் ஆண்டு ஜெயலலிதா மறைவையடுத்து அறிவிக்கப்பட்ட ஆர்.கே.நகர் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில், டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக அதிமுக தரப்பில் 89 கோடி ரூபாய் பண விநியோகம் செய்த குற்றச்சாட்டில், இவர் மீது குற்ற வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்கக்கோரி திமுக தொடர்ந்த வழக்கு, உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
ரவீந்திரநாத் குமார், தேனி மக்களவை உறுப்பினர் (அதிமுக) :
கடந்த 2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில், தேனி தொகுதியில் போட்டியிட்ட துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனான இவர், வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து தேர்தலில் வெற்றிப் பெற்றதால், அவரது வெற்றியை செல்லாது என்று அறிவிக்கக் கோரி, தேனி மக்களவை தொகுதி வாக்காளர் மிலானி என்பவர் உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த தேர்தல் வழக்கு நிலுவையில் உள்ளது.
மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் (திமுக) :
திமுக ஆட்சியின்போது சென்னை அண்ணா சாலையில், புதிய தலைமைச் செயலகம் கட்டியதில் ஊழல் நடைபெற்றுள்ளதாக 2011ஆம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கில், மறைந்த திமுக தலைவர் கருணாநிதி, தற்போதைய தலைவர் மு.க.ஸ்டாலின், பொதுச்செயலாளர் துரைமுருகன் மீதான வழக்கு உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
ஜெகத்ரட்சகன், அரக்கோணம் மக்களவை உறுப்பினர், (திமுக) :
முன்னாள் மத்திய இணை அமைச்சரான இவர், கடந்த 1995ஆம் ஆண்டு குரோம்பேட்டையில் உள்ள குரோம் லெதர் ஃபேக்டரி என்ற நிறுவனத்தை வாங்கியது தொடர்பாக, குவிட்டன் தாசன் என்பவரின் புகாரின் மீது சிபிசிஐடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அவ்வழக்கை ரத்து செய்யவும், விசாரணைக்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரியும், ஜெகத்ரட்சகன் தொடர்ந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
வைகோ, மாநிலங்களவை உறுப்பினர் (மதிமுக) :
கடந்த 2009ஆம் ஆண்டு சென்னை ராணி சீதை மன்றத்தில் நடந்த ’நான் குற்றம் சாட்டுகிறேன்’ என்ற புத்தக வெளியீட்டு விழாவில், ஈழத்தமிழர் விவகாரம் குறித்து பேசியபோது, இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், எம்பி, எம்எல்ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றம் வழங்கிய ஓராண்டு சிறைத் தண்டனையை எதிர்த்து, 2019 ஜூலையில் தொடர்ந்த வழக்கு, கடந்த 15 மாதங்களாக உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
தயாநிதிமாறன், மத்திய சென்னை மக்களவை உறுப்பினர் (திமுக) :
கரோனா காலத்தில் திமுகவின் ’ஒன்றிணைவோம் வா’ திட்டத்தில், பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களை தலைமைச் செயலாளர் சண்முகத்திடம் வழங்கிய பின், ’தலைமைச் செயலாளர் எங்களை மூன்றாம் தர மக்கள் போல் நடத்தினார்? நாங்கள் என்ன தாழ்த்தப்பட்ட ஆட்களா?’ என பேசிய தயாநிதிமாறன் எம்பி மற்றும் டி.ஆர்.பாலு எம்பி ஆகியோர் மீதான வன்கொடுமை தடுப்பு சட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி, உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது.
ஆர்.எஸ்.பாரதி, மாநிலங்களவை உறுப்பினர் (திமுக) :
இந்தாண்டு பிப்ரவரி மாதம் தேனாம்பேட்டை அன்பகத்தில் நடந்த ’கலைஞர் பாசறை’ கருத்தரங்கில், பட்டியல் இனத்தவர்கள் குறித்து அவதூறான கருத்து தெரிவித்ததாக, இவருக்கு எதிராக ஆதி தமிழர் மக்கள் கட்சி தலைவர் கல்யாணசுந்தரம் அளித்த புகாரில், தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் மத்திய குற்றப்பிரிவால் மே மாதம் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் வந்த ஆர்.எஸ்.பாரதி மீதான வழக்கு, சைதாப்பேட்டை பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
செந்தில் பாலாஜி, அரவக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினர் (திமுக) :
கடந்த 2011 முதல் 2015ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் அதிமுக அமைச்சரவையில், போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த இவர், வேலை வாங்கித் வருவதாகக் கூறி, பலரிடம் 2 கோடியே 80 லட்சம் ரூபாய் பெற்று மோசடி செய்ததாக, மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் பதிவு செய்த வழக்கை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு, உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இதயவர்மன், திருப்போரூர் சட்டப்பேரவை உறுப்பினர் (திமுக) :
நிலத்தகராறில் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்ய முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட இவர், பின்னர் நிபந்தனை பிணையில் வெளிவந்துள்ளார். இவ்வழக்கு உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
கார்த்தி சிதம்பரம், சிவகங்கை மக்களவை உறுப்பினர் (காங்கிரஸ்) :
கடந்த 2015ஆம் ஆண்டு, கிழக்கு கடற்கரை சாலையிலுள்ள முட்டுக்காட்டில் உள்ள சொத்துகளை, அக்னி எஸ்டேட்ஸ் ஃபவுன்டேஷன் என்ற நிறுவனத்திற்கு விற்பனை செய்ததில், 7 கோடியே 73 லட்ச ரூபாயை வருமான வரியை கணக்கில் காட்டாமல் மறைத்ததாக, கார்த்தி சிதம்பரம், அவரது மனைவி ஸ்ரீநிதி ஆகியோர் மீது வருமான வரித்துறை 2018 ஆம் ஆண்டு தொடர்ந்த வழக்கு எம்பி, எம்எல்ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இவை உள்ளிட்ட பெரும்பாலான வழக்குகளில் விசாரணை முடிந்துள்ளதால் தீர்ப்பு விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேற்படியான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு குறைந்தபட்சமாக 2 ஆண்டுகளோ அல்லது அதற்கு மேலோ சிறைத்தண்டனை விதிக்கப்பட்டால், மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் (1951) இன் படி, தண்டனை அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து 6 ஆண்டுகள்வரை தேர்தலில் போட்டியிட முடியாத சூழல் ஏற்படும். அதோடு, தற்போதைய நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர் பதவியும் தானாக இழக்க நேரிடும்.
அந்த வகையில், தற்போதைய அதிமுக அமைச்சரவையில் இளைஞர் நலன் மேம்பாடு, விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த பாலகிருஷ்ணா ரெட்டிக்கு, கடந்த 1998ஆம் ஆண்டு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடந்த ஒரு போராட்டத்தில், அரசு சொத்துகளை சேதப்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில், சிறப்பு நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது.
இதை எதிர்த்து, அவர் செய்த மேல்முறையீட்டை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம் தண்டனையையும் உறுதி செய்தது. இதையடுத்து, மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி பாலகிருஷ்ணா ரெட்டி பதவியிழந்தார். தமிழகத்தில் இச்சட்டத்தின்படி முதன் முதலாக தனது பதவியை இழந்தவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: “இந்தியாவை விற்கும் மோடி” - காங்கிரஸ் கடும் குற்றச்சாட்டு!