சென்னை மெரினா கடற்கரையில் 100 விழுக்காடு வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தி உருவாக்கப்பட்டிருந்த மணல் சிற்பத்தைத் தேர்தல் அலுவலரும், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையருமான பிரகாஷ் பார்வையிட்டார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "வாக்காளர்களுக்கான விழிப்புணர்வு , வாக்களிக்கும் ஜனநாயகக் கடமையின் அவசியத்தை வலியுறுத்தும்விதமாக சென்னை மாநகராட்சி கல்வித் துறை மூலம் பேச்சு, கட்டுரைப் போட்டிகள் நடத்தப்பட்டுவருகின்றன. கடந்த தேர்தல்களில் குறைவான வாக்கு விழுக்காடு பதிவான இடங்களில் ஆசிரியர்கள் மூலம் தற்போது விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுவருகிறது.
தமிழ்நாட்டிலேயே குறைவான வாக்குப்பதிவு விழுக்காடு உள்ள மாவட்டம் சென்னை. இதை மாற்ற ஏப்ரல் 6ஆம் தேதி ஊதியத்துடன் விடுப்பு அளிக்கப்பட வேண்டும் என அரசு அறிவித்துள்ளது. அதனை மீறும் நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த நிறுவனங்களின் மீது தேர்தல் ஆணையம் வரையில் புகார் அளிக்கப்படும். சென்னையில் உள்ள 16 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் இன்று அரசியல் கட்சியினரின் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு செய்யப்பட்டு, சீல்வைக்கப்படும்.
அந்தந்தத் தொகுதிகளில் உள்ள வாக்குப்பெட்டிகளை ஆயுதம் ஏந்திய காவலர்கள் பாதுகாப்பர். வாக்குச்சாவடி அலுவலர்களில் யார் யார் எந்த வாக்குச்சாவடிக்குச் செல்ல வேண்டும் என்பது வாக்குப்பதிவின் முதல்நாள்தான் அறிவிக்கப்படும். தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு ஏப்ரல் 3ஆம் தேதி இறுதிப் பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது. தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பாக 435 புகார்கள் வந்துள்ளன. அவற்றில் 422 புகார்கள் தீர்வு காணப்பட்டன. நான்கு புகார்கள் நிலுவையில் உள்ளன. மீதம் உள்ளவை போலி புகார்களாக இருக்கின்றன.
24 மணி நேரமும் புகார் மையம் செயல்பட்டுவருகிறது. தற்போதுவரை 52 கோடி ரூபாய் வரை சென்னை மாவட்டத்தில் பணம், பரிசுப்பொருள்கள் பறிமுதல்செய்யப்பட்டுள்ளன. தினமும் 30 ஆயிரம் வாகனங்கள் சோதிக்கப்படுகின்றன.
இந்தச் சோதனை மேலும் கடுமையாக்கப்படும். சென்னை மாவட்டத்தில் 21 தேர்தல் செலவின பார்வையாளர்கள் இருக்கின்றனர். சென்னையில் சுவர்களில் விளம்பரம் செய்யக்கூடாது. அதனையும் மீறி செய்தால் மாநகராட்சி விளம்பரங்களை அழித்துவிட்டு, வேட்பாளர் செலிவினக் கணக்கில் சேர்க்கும்.
ஒரு வேட்பாளர் 30 லட்சத்துக்கு மேல் செலவழிக்கக் கூடாது என்பது விதியாகும். வேட்பாளரின் செலவினக் கணக்கு அதிகரிக்கும்போது அவர் பிரச்சினைகளைச் சந்திக்க நேரிடும். சென்னையில் நான்காயிரத்து 200 காவலர்கள் அஞ்சல் வாக்களிக்கத் தகுதிபெற்றுள்ள நிலையில் மூன்றாயிரம் வரை வாக்குகள் பதிவாகியுள்ளன. மேலும் முக்கியப் பிரமுகர்களுக்கான பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு அஞ்சல் வாக்குகள் காவல் துறையின் மூலம் அஞ்சலில் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
சென்னை மாவட்டத்திற்கு 18 முதல் 20 கம்பெனிகளின் துணை ராணுவப்படையினர் வருகைதந்துள்ளனர். அதனை காவல் துறையினர் தேவைக்கு ஏற்ப பிரித்து அனுப்புவார்கள். சென்னையில் நான்கு தொகுதிகளில் பதற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாகக் காவல் துறையின் உளவுப் பிரிவினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
அவற்றின் பெயர்களை வெளிப்படையாகக் கூற முடியாது. சென்னையில் முதியோர், மாற்றுத்திறனாளிகள் அஞ்சல் வாக்குகளில் ஆறாயிரத்து 591 பதிவுசெய்யப்பட்டுள்ளன. 791 வாக்குகள் பதிவாகவில்லை. வாக்குப்பதிவு செய்வதற்கான காலம் முடிவடைந்ததால் அவர்களுக்கு மறுவாய்ப்பு வழங்கப்படாது. மின்தடை ஏற்பட்டதாகப் புகார் இல்லை. இரவில் மின் விநியோகம் தடைப்படுவதாக இதுவரை அரசியல் கட்சியினரிடமிருந்து புகார்கள் ஏதும் வரவில்லை.
புகார் செயலிகளிலும் ஒரு புகார்கூட பதிவாகவில்லை. சென்னையில் 19 ஆயிரம் மின்மாற்றிகள் உள்ளன. மின்தடை இயல்பானதாகவே இதுவரை இருந்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு மின்விநியோகம் மற்றும் பகிர்மான கழகத்திடமும் கேட்டோம். அது போன்ற நிகழ்வு எதுவும் இல்லை. அரசியல் கட்சிகளின் பரப்புரைக் கூட்டங்களில் முகக்கவசம் அணிவது தொடர்பாக அரசியல் கட்சியினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முக்கியத் தலைவர்களின் கூட்டங்களில் 30 விழுக்காட்டினர்தான் முகக்கவசம் அணிகின்றனர். தேர்தல் அலுவலர்கள் அதைக் கண்காணிப்பது மட்டுமே எங்கள் பணி இல்லை. தேர்தல் தொடர்பான நிறைய பணிகள் உள்ளன. ஆனாலும் அவர்களுக்குத் தொடர்ந்து எச்சரிக்கை செய்துவருகிறோம்.
தேர்தலுக்குப் பின் மீண்டும் கரோனா முகாம் அமைக்க சுகாதார அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினோம். தேர்தல் பணிக்குப் பின்னர் மீண்டும் சென்னையில் ஏற்கனவே கடைப்பிடிக்கப்பட்ட முறைகளில் கட்டுப்பாடுகளைக் கொண்டுவர திட்டமிட்டுள்ளோம். வீடுதோறும் சென்று காய்ச்சல் பரிசோதனையில் வரும் நாள்களில் ஆறாயிரம் பேர் ஈடுபட உள்ளனர். 250 வீடுகளுக்கு ஒரு நபர் காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்வார்.
ஒரு நாளுக்கு 100 காய்ச்சல் முகாம்கள் நடத்த முடிவுசெய்யப்பட்டுள்ளன. சென்னையில் ஏப்ரல் இறுதிக்குள் கரோனா கட்டுக்குள் வரும் என்று நம்புகிறோம். மாநகராட்சி அலுவலர்களுடன் ஆலோசித்து தேர்தலுக்குப் பிறகு சென்னையில் மெரினா கடற்கரை உள்ளிட்ட மக்கள் நடமாட்டம் அதிகம் நிறைந்த இடங்களில் சில கட்டுப்பாடுகளைக் கொண்டுவர முடிவுசெய்துள்ளோம்.
பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு ஏற்பட்டாலும் அந்தக் கசப்பான அனுபவத்தை ஏற்றுக்கொள்ளதான் வேண்டும். அலுவலகம், பெரிய நிறுவனங்கள், வணிக வளாகங்களில் பொதுமக்கள் முகக்கவசம் அணியாமல் சென்றால் அந்த நிறுவனத்தின் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
ஒரு நிறுவனத்தில் கரோனா தொற்று வந்தால் 20 நாள்கள் அந்த நிறுவனத்திற்குச் சீல்வைக்கப்படும். வாக்குச்சாவடிகளில் கரோனா பாதுகாப்பு வழிமுறைகளைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். முகக்கவசம் அணியாவிட்டால் யாரும் வாக்களிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள்" என்றார்.
இதையும் படிங்க:'வாக்காளர்களுக்கு அல்வா' - சுயேட்சை வேட்பாளர் சொன்ன சீக்ரெட்