சென்னை: கரோனா தொற்று பாதிப்பு தற்போது கட்டுக்குள் இருந்தாலும் அலுவலகம் உள்ளிட்ட இடங்கள் மீண்டும் செயல்படத் தொடங்கியதும் அங்கு தொற்று தற்போது அதிகரித்து வருகிறது.
சென்னை அண்ணா நகரில் உள்ள ஜிஎஸ்டி ஆணையரக தலைமை அலுவலகத்தில் கரோனா தொற்று பாதிப்பு அதிகளவில் உள்ளதாக அங்கு பணியாற்றும் துணை ஆணையர் பாலமுருகன் புகார் தெரிவித்துள்ளார்.
சென்னையில் உள்ள ஜிஎஸ்டி வெளிப்புற ஆணையரகத்தில் பணியாற்றும் 352 அலுவலர்களில், 120 பேர் தற்போது பணியாற்றும் நிலையில், 20 விழுக்காடு அலுவலர்களுக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அலுவலர் புகார் தெரிவித்துள்ளார்.
மேலும், இரண்டு அலுவலர்கள் கரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அலுவலகம் முழுவதும் குளிர்சாதன வசதி இருப்பதால், தொற்று பரவல் அதிகரிப்பதாகவும், இதனை கட்டுப்படுத்த காற்றோட்ட வசதியை ஏற்படுத்த வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.