சென்னை கோடம்பாக்கம் பகுதியில் உள்ள ஷேர் கான் தோட்டத்தில் வசிப்பவர்கள் வடிவேலு (75), அமுதா (61) தம்பதியி. இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். மகன் மலேசியாவில் பணியாற்றிவருகிறார். மகள் திருமணமாகி வண்ணாரப்பேட்டையில் வசித்துவருகிறார்.
வடிவேலு-அமுதா தம்பதிக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், அடிக்கடி குடும்பத் தகராறு காரணமாக இருவரும் வாக்குவாதம் செய்து சண்டையிடுவதும், அண்டை வீட்டார் அதனை சமாதானம் செய்து வைப்பதும் வழக்கமாக நடந்து வந்துள்ளது.
இந்நிலையில், நேற்றிரவும் வழக்கம்போல் தம்பதி இருவரும் மது அருந்திவிட்டு வாக்குவாததில் ஈடுபட்டுள்ளனர். சண்டை முற்றியதில் ஆத்திரமடைந்த வடிவேலு தனது மனைவி அமுதா மீது மண்ணெண்ணையை ஊற்றி தீவைத்துள்ளார். அப்போது தவறுதலாக அவர் மீதும் தீப்பற்றிக் கொண்டதில் இருவரும் அலறி கூச்சலிட்டுள்ளனர்.
அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் தீயை அணைத்து, தம்பதியினரை மீட்டு 75 விழுக்காடு தீக்காயத்துடன் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இன்று காலை சிகிச்சைப் பலனின்றி தம்பதி இருவரும் உயிரிழந்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக கோடம்பாக்கம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.