சென்னை: தமிழ்நாட்டில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களின் வாக்கு எண்ணிக்கை நாளை (பிப்ரவரி 22) நடைபெறவுள்ளது. அது குறித்து தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் தலைமையில் பாதுகாப்பு ஆலோசனை நடைபெற்றது.
அதில், 268 வாக்கு எண்ணிக்கை மையங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, வாக்கு எண்ணிக்கை நடவடிக்கைகளைக் கண்காணித்திடவும், தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் அறிவிப்பு செய்யவும், காவல் துறையினரின் மூன்றடுக்குப் பாதுகாப்பு ஏற்பாடுகள்செய்யப்பட்டுள்ளன.
இதனையடுத்து தடையில்லா மின்சார வசதி, கணினி வசதிகள், வாக்கு எண்ணிக்கை அலுவலர்கள், காவல் துறையினருக்குத் தேவையான உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டன எனத் தமிழ்நாடு தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளுக்கான வாக்கு எண்ணிக்கை 268 மையங்களில் நாளை காலை (பிப்ரவரி 22) 8 மணிக்குத் தொடங்கும்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கான ஆயத்தப் பணிகள் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் காணொலிக் காட்சி வாயிலாக மாநில தேர்தல் ஆணையர் வெ. பழனிகுமார் தலைமையிலும், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையச் செயலாளர் சுந்தரவல்லி முன்னிலையிலும், அனைத்துத் தேர்தல் பார்வையாளர்கள், மாவட்டத் தேர்தல் அலுவலர்கள், மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுடன் இன்று (பிப்ரவரி 21) நடைபெற்றது.
இக்காணொலி ஆய்வுக்கூட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை பணியின்போது பின்பற்றப்பட வேண்டிய பொருள்கள் குறித்து விவாதிக்கப்பட்டு அறிவுரைகள் வழங்கப்பட்டன.
இதையும் படிங்க: 'வாக்கு விழுக்காடு குறைந்ததற்கு திமுக அரசின் அட்டூழியமே காரணம்!'