சென்னை சிறுசேரியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தில் 2019-20 ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெற்றது. இதில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டு மாணவர்களுக்கு சேர்க்கை ஆணையை வழங்கினார். இதில், அரசு முதன்மைச் செயலர், கால்நடை பராமரிப்பு பால்வளம் மற்றும் மீன்வளத் துறை செயலர் கோபால், ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் பெலிக்ஸ் உட்பட பலர் பங்கேற்றனர்.
பின்னர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசியபோது, "அஞ்சல் துறை தேர்வு தொடர்பாக நாளை சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பப்படலாம். அப்போது உரிய விளக்கம் அளிக்கப்படும். அதிமுகவில் எம்ஜிஆர், ஜெயலலிதாவை தவிர அக்கட்சியின் சிறந்த தலைவராக யாராலும் விளங்க முடியாது.
வேலூர் திமுகவின் வெற்றிக் கோட்டை அல்ல. திமுக போலியான வாக்குறுதிகளை அளித்து வெற்றி பெற்றுள்ளதால், வேலூர் மக்களவைத் தேர்தலில் அதிமுக நிச்சயம் வெற்றிபெறும்" என்று நம்பிக்கை தெரிவித்தார்.
ஏ.சி.சண்முகத்தை ரஜினி ஆதரிக்கிறாரா என கேட்டபோது, "அதிகாரப்பூர்வமாக தெரியாத நிலையில் அதுகுறித்து பேச விரும்பவில்லை. எங்கள் கூட்டணி வேட்பாளர் வெற்றிக்காக கடுமையாக பாடுபடுவோம்" என்று உறுதியளித்தார்.