இது தொடர்பாக, சென்னை புளியந்தோப்பைச் சேர்ந்த பேட்ரிக் என்பவர் தாக்கல் செய்துள்ள ஆட்கொணர்வு மனுவில், '65 வயதான தனது தாய் சலத்மேரி கரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த 11ஆம் தேதி தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார்.
இதையடுத்து, கிறிஸ்தவ முறைப்படி அவரது உடலை அடக்கம் செய்ய கீழ்ப்பாக்கம் கல்லறைத் தோட்டத்திற்குக் கொண்டு சென்ற போது, டி.பி. சத்திரம் பகுதியைச் சேர்ந்த சில ரவுடிகள், அடக்கம் செய்யவிடாமல் தகராறு செய்தனர். இறந்தவரின் உடலை அமைதியாக அடக்கம் செய்யவிடாமல் தடுப்பவர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்து, காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்தும் இதுவரை தகராறு செய்த ரவுடிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அதனால், காவல்துறை பாதுகாப்புடன் மே 13ஆம் தேதி உடலை அடக்கம் செய்ய காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும்' எனக் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், ஹேமலதா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, மாநகராட்சி சார்பில் ஆஜரான வழக்கறிஞர், கரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் உடலை அவர்களின் சமுதாய முறைப்படி அடக்கம் செய்ய திரு.வி.க.நகர் 'தாங்கல்' பகுதியில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் காவல்துறை பாதுகாப்புடன் திரு.வி.க நகர் 'தாங்கல்' பகுதியில் உடலை அடக்கம் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: மாநகராட்சி உத்தரவை ரத்துசெய்ய வேண்டும் - உயிரிழந்த மருத்துவர் சைமன் மனைவி வழக்கு!