ஆவடி மாநகராட்சியில் கரோனா தொற்று நோய் வேகமாகப் பரவி வருகிறது. இதனை அடுத்து, தொற்றை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம், சுகாதாரத்துறை ஆகியவை தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, மாநகராட்சி நிர்வாகம் சார்பில் வீடு வீடாக நோய் பாதிப்பு குறித்து கண்டறிதல், கிருமி நாசினி தெளித்தல், நோய் பாதிப்பு பகுதியில் மருத்துவ முகாம் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை செய்து வருகின்றனர்.
மேற்கண்ட பணிகளுக்கு 700க்கும் மேற்பட்ட களப்பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்களாக நியமனம் செய்யப்பட்டனர்.
இவர்கள் கடந்த மார்ச் இறுதி வாரத்தில் இருந்து தற்போது வரை பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு கடந்த நான்கு மாதங்களுக்கு மேலாக ஊதியம் வழங்கப்படாமலேயே உள்ளது.
தற்போது, ஐந்து மாதமும் முடிந்து விட்டது. இருந்த போதிலும் இவர்களுக்கு ஊதியம் வழங்காவிட்டாலும், தொடர்ந்து களப் பணியாற்றி வருகின்றனர். இது குறித்து, களப்பணியாளர்கள் பலமுறை மாநகராட்சி நிர்வாகத்திடம் சம்பளம் வழங்கக் கோரி வலியுறுத்தி உள்ளனர்.
ஆனால், அலுவலர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் தொடர்ந்து அலட்சியமாக இருந்து வருகின்றனர். இதனால், ஆத்திரமடைந்த 200க்கும் மேற்பட்ட களப்பணியாளர்கள், மாநகராட்சி அலுவலக நுழைவுவாயில் முன்பு திரண்டனர். பின்னர், அவர்கள் ஊதியம் வழங்கக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் பிறகும், போராட்டத்தில் ஈடுப்பட்டோரிடம் பேச்சுவார்த்தை நடத்திட அலுவலர்கள் யாரும் வரவில்லை. இதனை அடுத்து, அவர்கள் ஆவடி புதிய ராணுவ சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.இதனால் அங்கு பதட்டம், பரப்பரப்பு ஏற்பட்டது.
மேலும், அங்கு போக்குவரத்தும் பாதிக்கப்பட்டு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இது குறித்து தகவலறிந்து, ஆவடி காவல் நிலைய காவல் ஆய்வாளர் காளிராஜ் தலைமையிலான காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
பின்னர், போலீசார் போராட்டம் நடத்தியவர்களை கலைந்து செல்லுமாறு கூறினர். ஆனால், அவர்கள் அலுவலர்கள் வந்து ஊதியம் வழங்குவதாகக் உறுதி அளித்தால்தான் போராட்டத்தை கைவிடுவோம் என்றனர்.
இதன் பிறகு, காவல் துறையினர் மாநகராட்சி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, ஆணையாளர் நாராயணன் தலைமையில் சுகாதார துறை அலுவலர்கள் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
இது குறித்து களப்பணியாளர்கள் கூறுகையில், கரோனா காலத்தில் நாங்களும் கடந்த ஐந்து மாதங்களாக உயிரை பணயம் வைத்து வீடு வீடாக நோய் குறித்து கணக்கெடுப்பு, கிருமி நாசினி தெளித்தல் உள்ளிட்ட பணிகளை செய்து வருகிறோம்.
தற்போது எங்களுக்கு நான்கு மாதங்களாக செய்த பணிக்கு இன்று வரை ஊதியம் வழங்கப்படவில்லை. இதனால், நாங்கள் குடும்பம் நடத்த முடியாமல் அவதிப்பட்டு வருகிறோம்.
குறிப்பாக, சாப்பாடு செலவுக்கு கூட பணம் இன்றி தவிக்கிறோம். மேலும், நாங்கள் சிலரிடம் கடன் வாங்கித்தான் எங்களது குடும்பத்தை நடத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.
எங்களின் குடும்ப சூழ்நிலையை கருதி நான்கு மாத ஊதியத்தை வழங்க உடனடியாக வழங்க வேண்டும் என்றனர்.
இதையடுத்து, அலுவலர்கள் இரு மாதங்களுக்கு ஊதியம் போட்டு விட்டோம். உங்களுக்கு நாளை கிடைக்கும். மேலும், இரு மாதங்களுக்கு இன்னும் சில தினங்களில் ஊதியம் வழங்கி விடுவோம் என்றனர். அதையடுத்து, களப்பணியாளர்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.