தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளிலும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர்கள் இல்லை. நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக அரசு மருத்துவர்கள் பல கட்டப் போராட்டங்களை கடந்த இரண்டு ஆண்டுகளாக நடத்தியும், அரசு அந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை.
கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை வழங்குவதற்கு படுக்கைகளின் எண்ணிக்கைகளை அரசு அதிகரித்துள்ளது வரவேற்புக்குரியது. ஆனால், படுக்கைகளை அதிகரித்ததற்கு ஏற்ப மருத்துவர்களையோ, செவிலியர்களையோ அரசு அதிகரிக்கவில்லை. இதனால் கடுமையான பணிச்சுமைக்கு மருத்துவர்களும் செவிலியர்களும் உள்ளாகி உள்ளனர்.
இதனிடையே தொடர்ச்சியாக ஆறு மணி நேரத்திற்கும் மேலாகக்கூட கரோனா வார்டில் பணி வழங்கப்படுகிறது. இவ்வாறு பணியாற்றுபவர்களுக்கு வைரஸ் தொற்றுக்கு ஆளாகும் சூழலில் அதிகம் நேரம் செலவழிப்பதோடு, அவர்களது மனநிலையும் ஒருங்கே பாதிக்கப்படுகிறது. நாள்தோறும் ஆறு மணி நேரப் பணியை ஒரு வாரத்திற்கு செய்த பின், சுகாதாரப் பணியாளர்களை 14 நாள்கள் தனிமைப்படுத்த வேண்டும். அவர்களுக்கு கரோனா பரிசோதனைகள் செய்யப்பட வேண்டும்.
இது குறித்து அரசு அறிவிப்புகள் இருந்தும்கூட சில மருத்துவமனைகள் அவ்விதிகளைப் பின்பற்றுவதில்லை. அவர்களுக்கு கரோனா பரிசோதனைகள் செய்யப்பட வேண்டும். இதுகுறித்து அரசு அறிவிக்கைகள் இருந்தும்கூட சில மருத்துவமனைகள் அவ்விதிகளை பின்பற்றுவதில்லை.
சென்னை எழும்பூர் மகப்பேறு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு தொடர்ச்சியாக 12 மணி நேரம், 24 மணி நேரம் என்றும் கரோனா வார்டு பணி வழங்கப்பட்டுள்ளது. உச்சக்கட்டமாக சிலருக்கு 96 மணி நேரத்திற்கு (4 நாட்களுக்கு), தொடர்ச்சியாக கரோனா வார்டு பணிகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், மருத்துவர்களுக்கு பல மணி நேரம் கரோனா பணி வழங்குவது பற்றி பேசிய சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரவீந்திரநாத், ”மருத்துவர்களை தொடர்ச்சியாக பல மணிநேரங்கள் பணியாற்றச் செய்வது கண்டனத்திற்குரியது. இது அப்பட்டமான மனித உரிமை மீறல் என்பதோடு, மனிதாபிமானமற்ற செயல். இவ்வாறு தொடர்ச்சியாக பணியாற்ற வேண்டும் என கட்டாயப்படுத்துபவர்கள், மனிதநேயமற்ற முறையில் ஊழியர்களை நடத்துபவர்கள் மீது அரசு உரிய நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும்” என்று கூறினார்.
”சில மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு இரண்டாவது முறையாக கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு நான்கு லட்சம் ரூபாய் நிவாரண உதவியை அரசு வழங்கிட வேண்டும்” எனவும் அவர் தெரிவித்தார்.
மருத்துவர்கள், பயிற்சி மருத்துவர்கள், பட்ட மேற்படிப்பு மாணவர்கள் ஆகியோருக்கு தொடர்ச்சியாக 24 மணி நேர வேலை செய்ய உத்திரவிடுவது சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அதிகாரவர்க்கத்தின் ஒடுக்குமுறைக்கு எதிரான அடையாளம் அனிதா