சென்னையில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “பொதுமக்கள் கரோனா வைரசைக் கண்டு பதற்றமடைய வேண்டாம். அதே நேரத்தில் கண்ணும் கருத்துமாக மிக கவனமாக இருக்க வேண்டும்.
அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இந்தியாவிலேயே அதிகபட்சமாக 30 ஆயிரம் பரிசோதனை செய்யும் அளவை தமிழ்நாடு எட்டியுள்ளது. தமிழ்நாட்டில் கரோனா பாதித்தவர்களில் இன்று மட்டும் 1,358 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
கரோனா முழுமையாக கட்டுப்படுத்துவது கடவுளுக்கு தான் தெரியும் என்று முதலமைச்சர் பழனிசாமி கூறியது எதார்த்தமானது. குறிப்பாக முதலமைச்சருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு நெகட்டிவ் வந்துள்ளது. தமிழ்நாட்டில் கரோனா தொற்றுக்கான பரிசோதனை இதுவரை 9,19,204 பேருக்கு செய்யப்பட்டுள்ளது. மேலும், கரோனா தொற்றினால் பாதித்தவர்களில் இதுவரை 34,112 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்” என்று தெரிவித்தார்.